எனக்கு பசிக்கும்ல… வாழை தோட்டத்தை சூறையாடிய யானைக் கூட்டம் ; தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்ட விவசாயி..!!

Author: Babu Lakshmanan
9 September 2022, 5:38 pm
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் தெள்ளாந்தியில் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டங்கள் 900 வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட சிதப்பால் அடுத்த தெள்ளாந்தி மலையடிவாரத்தில் மணிகண்டன் என்பவர் அருகே 6 ஏக்கர் விவசாய நிலத்தை பாட்டத்திற்கு எடுத்து வாழை மரங்களை வளர்த்து வருகிறார். தற்போது மரங்கள் அனைத்தும் குலை தள்ளியுள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டமாக மலையடிவாரத்திற்கு வந்து வாழை தோப்புக்குள் புகுந்தது. அங்கு ஒரு ஏக்கர் பரப்பளவில் குலை தள்ளிய நிலையில் இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. இதில் ஆறு காட்டு யானைகள் வந்துள்ளதாக தெரிகிறது.

மேலும் இதுபோன்று அப்பகுதியில் விளைநிலங்களை தொடர்ச்சியாக யானைகள் சேதப்படுத்தி வருவது அரங்கேறி வருகிறது.கடந்த ஆண்டு இது போன்று 600 வாழைமரங்களை யானை கூட்டங்கள் சேதப்படுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

யானைகள் சேதப்படுத்திய வாழை மரங்களுக்கு நிவாரணம் தர வேண்டும், மேலும், யானைகள் இப்பகுதிக்கு வராதவாறு தடுப்புகள் அமைத்து தர வேண்டும், மேலும் சேதப்படுத்திய வாழைகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை என்றால், தனது தற்கொலைக்கு அரசுதான் காரணம் என கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொள்ள போவதாக விவசாயி மணிகண்டன் செய்தியாளர்களிடம் வேதனையோடு தெரிவித்துள்ளார்.

Views: - 515

0

0