சிவகாசி to திண்டுக்கல்… அசால்ட்டாக பேருந்தை கடத்திச் சென்ற நபர்.. 24 மணி நேரத்திற்குள் சிக்கிய கொள்ளையன்!

Author: Babu Lakshmanan
28 January 2023, 8:50 am
Quick Share

சிவகாசி அருகே பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் கடத்திச் சென்றவரை திண்டுக்கல்லில் பிடிபட்டார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருபவர் பிரம்மன். இவர் தனது தொழிற்சாலைக்கு வரும் தொழிலாளர்களை ஏற்றி வருவதற்காக பஸ் ஒன்றை வைத்துள்ளார். ஒவ்வொரு நாளும் தொழிற்சாலை முடிந்ததும் மாலை தொழிலாளர்களை இறக்கிவிட்டு சிவகாசி பாறைப்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் அந்த பஸ்ஸை நிறுத்தி வைப்பது வழக்கம் ஆகும். இதன் அடிப்படையில் நேற்று மாலை அந்த பஸ்ஸினை வழக்கமாக நிறுத்தும் பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைத்திருந்தனர்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு அந்த பஸ் அங்கிருந்து சென்று விட்டதாக பெட்ரோல் பங்கின் ஊழியர்கள் பட்டாசு தொழிற்சாலை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். பட்டாசு தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் யாரும் பஸ்சை எடுத்துச் செல்லாததால், சந்தேகம் அடைந்த பட்டாசு தொழிற்சாலை நிர்வாகம் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் சிவகாசி கிழக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேந்திர குமார் தலைமையிலான போலீசார் தேடி வந்ததுடன், அப்பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வந்தனர். இதற்கிடையே, இதே தொழிற்சாலையில் இருந்து பெங்களூருக்கு பட்டாசுகளை இறக்கி விட்டு திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு பஸ் காணாமல் போனது குறித்து தகவல் கொடுத்தனர்.

பெங்களூருவில் பட்டாசுகளை இறக்கிவிட்டு லாரியில் திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்த பூதிபுரம் பிரிவில் ஒரு சாலையோர ஹோட்டல் முன்பு பஸ் நிற்பதாக தகவல் கொடுத்தனர். உடனடியாக சிவகாசி போலீசார் திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தாடிக்கொம்பு எஸ்பி தனி பிரிவு ஏட்டு பழனி செல்வத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அடிப்படையில் அப்பகுதிக்கு வந்த தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு பழனி செல்வம், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அந்த பஸ்ஸிற்கு அருகில் உள்ள ஹோட்டலில் அமர்ந்து கொண்டு கண்காணித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பேருந்தில் ஒரு மர்ம நபர் ஏறுவதை பார்த்து அருகில் இருந்த பொதுமக்களையும் அழைத்துக் கொண்டு, பேருந்தில் ஏறிய நபரை பிடித்து விசாரணை செய்தார்.

விசாரணை செய்த பொழுது, சீர்காழி அடுத்த தைக்கால் கொள்ளிடம் என்ற பகுதியைச் சேர்ந்த முகமது கரிமுல்லா (36) என்பது தெரியவந்தது. இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தாடிக்கொம்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விசாரணை மேற்கொண்டு இருந்த பொழுது, சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேந்திர குமார் தலைமையிலான போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, உரிய விசாரணை செய்து கடத்தப்பட்ட பஸ்ஸினை சிவகாசி போலீஸ் இடம் தாடிக்கொம்பு போலீசார் ஒப்படைத்தனர். இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 331

0

0