‘நிவர்’ புயல் பாதிப்பை பார்வையிட மத்தியக் குழு நாளை தமிழகம் வருகை..!!

30 November 2020, 8:50 am
nivarrrrr - updatenews360
Quick Share

சென்னை: ‘நிவர்’ புயல் பாதிப்புகளை பார்வையிட ஏழு பேர் கொண்ட மத்திய குழு நாளை தமிழகம் வருகிறது.

மாநிலங்களில் பேரிடர் ஏற்படும் காலங்களில் சேதங்களை மதிப்பிட மத்திய அரசு குழுவை அனுப்பும். அந்த குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு, மத்திய அரசு நிதியுதவி வழங்கும். அந்த வகையில், கடந்த வாரம் நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களும், புதுச்சேரி மாநிலமும் பாதிப்புக்குள்ளாகின.

இதனால் பல ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின. வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்து குடிசைகள் சேதமடைந்தன. மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன மேலும் கால்நடைகள் இறந்தன. புயல் பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், தொலைபேசியில் கேட்டறிந்தார். மேலும் தமிழக அரசுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்தார்.

இந்நிலையில், நிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட்டு, சேத விபரங்களை மத்திய அரசுக்கு அறிக்கையாக அளிப்பதற்காக மத்திய அரசு ஏழு பேர் கொண்ட குழுவை தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அனுப்ப உள்ளது. இந்த குழுவில், மத்திய வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலர், மத்திய நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலர், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை செயலர். மேலும், மத்திய மின்துறை செயலர், மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை, மீன்வளத் துறை, நீர்வளத்துறைகளின் செயலர்கள் என, ஏழு பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் நாளை தமிழகம் வருகின்றனர் நாளை முதல் ஆய்வு பணியை துவக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடலுார், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், புயல் பாதிப்புகளை பார்வையிட உள்ளனர். இக்குழுவினர் தமிழக முதலமைச்சர் மற்றும் புதுச்சேரி முதலமைச்சரையும், அதிகாரிகளையும் சந்தித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0