வீடு புகுந்து திருட முயன்ற நபரை தாக்கிய பொதுமக்கள்…. திடீரென உயிரிழந்த இளைஞர் : நாகையில் அதிர்ச்சி… போலீசார் விசாரணை
Author: kavin kumar11 January 2022, 7:04 pm
நாகப்பட்டினம்: வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் டாட்டா நகர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ். இவரது தாய் கண்ணம்மாள் மற்றும் மனைவி மலர்செல்வியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு காளிதாஸ் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டுள்ளார். அப்பொழுது அவர் வீட்டை சரியாக பூட்டாமல் சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டில் திடீரென சத்தம் ஏற்பட்டதையடுத்து மலர்செல்வியும், கண்ணம்மாவும் பார்த்துள்ளனர். 25 மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வீட்டின் பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு இருப்பதை கண்டனர். இதனையடுத்து இவர்கள் கூச்சலிட முயன்ற போது அந்த இளைஞர் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். வீட்டை விட்டு இளைஞர் வெளியேறிய நேரத்தில் மலர்செல்வி திருடன் என சத்தமிட அருகிலிருந்தவர்கள் அந்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதனையடுத்து திருட்டில் ஈடுபட்ட இளைஞரை அருகில் இருந்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இளைஞரை நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சிகிச்சை பலனளிக்காமல் அந்த இளைஞர் இன்று உயிரிழந்தார். இதனையடுத்து நாகப்பட்டினம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து காளிதாஸ் உள்ளிட்ட அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இளைஞர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
0
0