வரும் 11ம் தேதி பால் நிறுத்தப் போராட்டம்… ஆவினில் கொள்முதல் விலையை உயர்த்ததால் அதிருப்தி.. பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!!

Author: Babu Lakshmanan
1 March 2023, 11:47 am
Milk Rate - Updatenews360
Quick Share

ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதலுக்கான விலையை 7 ரூபாய் உயர்த்தி அறிவிக்காவிட்டால் வரும் 11ஆம் தேதி பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஆவின் பால் கொள்முதலுக்கான விலையை உயர்த்த வேண்டும் என தொடர்ச்சியாக பால் உற்பத்தியாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

ஆவின் பால் கொள்முதலுக்கான விலையை குறைத்து வழங்குவதன் காரணமாக பால் உற்பத்தியாளர்கள் தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் வழங்கி வருவதால், ஆவின் பால் பண்ணையில் ஆவின் பால் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது.

இந்த நிலையில், மதுரை மத்திய பால்பண்ணையில் பொது மேலாளரை சந்தித்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் உயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். தங்களது கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் வரும் 11ஆம் தேதி அன்று பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்

தனியார் பால் நிறுவனம் பால் கொள்முதல் விலையை 35 ரூபாய் முதல் 38 ரூபாய் வரைக்கும் வழங்கக்கூடிய நிலையில், ஆவின் பால் நிறுவனம் உற்பத்தி 32 ரூபாய் வரை தான் வழங்கி வருகிறது. இதில், பால் உற்பத்தியாளர்களுக்கு 28 ரூபாய் மட்டுமே செல்கின்றது.

இதனால் ஆவின் பால் உற்பத்தியாளர்கள், தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் கொள்முதலை வழங்கி வருவதன் காரணமாக, மதுரை ஆவின் பால்பண்ணையில் நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 92 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல், தற்பொழுது ஒரு லட்சத்து 38 ஆயிரம் லிட்டராக குறைந்துள்ளது. இதனால் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளாக 10 ரூபாய் கொள்முதல் விலை உயர்த்த கோரியும், 3 ரூபாய் மட்டுமே உயர்த்திய நிலையில், தொடர்ந்து 7 ரூபாய் உயர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையிலும், தொடர்ச்சியாக வரும் 11ஆம் தேதிக்குள் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் , அன்றைய தினம் உசிலம்பட்டி , செல்லம்பட்டி, சேடபட்டி, திருமங்கலம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து செல்லக்கூடிய ஒரு லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதலை நிறுத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆவின் பால் கொள்முதல் விலை குறைவு காரணமாக ஒவ்வொரு பால் ஒன்றிய சங்கத்திலும் 4 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் வந்த நிலையில், 1900லிட்டராக குறைந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Views: - 446

0

0