சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து அதிகரிப்பு : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா…?

Author: kavin kumar
18 January 2022, 5:26 pm
Quick Share

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் சாலைகளில் கட்டுப்பாடு இன்றி திரியும் மாடுகளால் விபத்துகள் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளார்.

இந்திய அளவில் அதிக வாகன விபத்துகள் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகமும் உள்ளது. சாலை போக்குவரத்தால் அதிக விபத்துகள் ஏற்படுவதைத் தொடர்ந்து கிராம, நகர ,மாவட்ட ,மாநில சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வாகனங்கள் நெரிசலில் இன்றி செல்ல மத்திய அரசு பலவிதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வாகன விபத்துக்கள் ஒரளவு குறைந்து வருகின்ற நிலையில், சாலைகளில் கட்டுப்பாடின்றி திரியும் மாடுகளால் அங்கங்கே விபத்துக்கள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சலாக உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் , மண்ணூர், வல்லக்கோட்டை , வல்லம், போந்தூர், ஓரகடம், வாரணவாசி, பண்ருட்டி, எருமையூர், குன்றத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் விற்பனை செய்யப்பட்டு பலவிதமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பெரும்பாலான இடங்களில் விளைநிலங்கள் இல்லாததால், மேய்ச்சலுக்கு செல்ல முடியாமல் மாடுகள் சாலைகளில் அலைந்து திரிகின்றது. மாட்டு தீவனங்களின் விலைகளும் அதிகமாக உள்ளதால் தீவனங்களை வாங்க மாட்டின் உரிமையாளர்கள் தயாராக இல்லை எனக் கூறப்படுகிறது.

மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை தங்கள் இடங்களில் கட்டி வைக்காமல் அவித்து விடுவதால் மாடுகள் மனம் போன போக்கில் செல்கின்றது. உணவு தேவைப்படும் போது சாலைகளில் உள்ள குப்பைகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும், போஸ்டர்களையும், ஹோட்டலுக்கு வெளியே வீசப்படும் உணவுகளையும் சாப்பிட்டு விட்டு சாலையின் நடுவிலேயே படுத்து தூங்குகின்றன. உணவைத் தேடி அலையும் மாடுகளும், சாலைகளிலேயே சுற்றித் திரிவதால் வேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு இறந்து போகின்றது. குறிப்பாக ஜிஎஸ்டி சாலையிலிருந்து சிங்கப்பெருமாள் கோவில், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையிலும், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலும், தாம்பரம் காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலையிலும் ஆயிரக்கணக்கில் செல்லும் கனரக வாகனங்களில் தினந்தோறும் மாடுகள் விபத்தில் சிக்குகின்றன.

விபத்தில் மாடுகள் காயம் அடைவது மட்டுமின்றி ,வாகனம் ஓட்டுபவரும் காயமுறுகிறார். வாகனமும் சேதமடைகின்றது. இதனால் போக்குவரத்தும் பாதிப்படைகின்றது. கடந்த மூன்று வருடத்தில் மட்டும் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் சிங்கப்பெருமாள்கோவில் நெடுஞ்சாலையில் மட்டும் சுமார் 150க்கும் மேற்பட்ட மாடுகள் வாகன விபத்துக்களால் உயரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. போர்க்கால அடிப்படையில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் மேய்ச்சலுக்கு உண்டான நிலங்களை கண்டறிந்து மாடுகளுக்கு உண்டான தீவன உற்பத்தியை பெருக்கி மாடுகள் உயிர் இழப்பதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைக்கின்றனர்.

Views: - 203

0

0