நடிகர் சங்கத் தேர்தலுக்கான தடை நீட்டிப்பு : புதிய நீதிபதிகள் அமர்வு உத்தரவு!!

Author: Babu
10 October 2020, 7:11 pm
Quick Share

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 23ல், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் நடந்தது. இதில், தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்கவில்லை என்று கூறி, தேர்தலை ரத்து செய்யுமாறு சில உறுப்பினர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்ததோடு, நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்த பின்பு எடுத்த எந்த முடிவுகளும் செல்லாது எனவும் அதிரடியாக அறிவித்தது.

மேலும், நடிகர் சங்கத்திற்கான மறு தேர்தலை நடத்துவதற்கு, ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமித்து, மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டுமென்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்த இடைக்காலத்தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, தேர்தலை புதிதாக நடத்த வேண்டுமா..? அல்லது ஏற்கனவே பதிவான வாக்குகளை எண்ணினால் போதுமா..? என முடிவெடுக்க இருதரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இருதரப்பினரும் உடன்படாததால் விசாரணையில் இருந்து நீதிபதி சுந்தரேஷ் அமர்வு விலகினார். இதனால், இந்த வழக்கு புதிய நீதிபதிகள் டிஎஸ் சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த அமர்வு முன்பு நடிகர் சங்கத் தேர்தல் வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. அப்போது, வழக்குகளை காணொளி காட்சியின் மூலம் விசாரிக்காமல், நேரடியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நவ.,3ம் தேதி முதல் நடிகர் சங்கத் தேர்தல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரையில், நடிகர் சங்கத் தேர்தலுக்கான தடையை நீட்டிப்பதாகவும் தெரிவித்தனர்.

Views: - 45

0

0