திரையுலகின் முதல் திருப்புமுனை : கலைவாணர் நினைவுகள்!!

30 August 2020, 6:34 pm
Kalaivanar - Updatenews360
Quick Share

தமிழ்த் திரையின் முதல் சீர்திருத்தவாதி, திரையுலகின் முதல் திருப்புமுனை, நடிகர்களில் முதல் சிலை இவருக்குத்தான், ஒட்டுமொத்த உலகத் திரையுலகத்திலேயும் ஒரே கொடை வள்ளல்!

அவர்தான் “கலைவாணர்” என்கிற கண்ணிய அடைமொழியோடு அழைக்கப் பட்ட என்.எஸ்.கிருஷ்ணன்.
(நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன்) பிறந்தது 1908 ம் ஆண்டில் – மறைந்தது 1957ம் ஆண்டில்.

வெறும் 49 ஆண்டுகளைக் கூட முழுதாக வாழாத ஒருவர். காலமெல்லாம் மக்கள் மனதில் கோயில் கட்டிக் கொண்டாடப் பட்டார். நாடகத்திலும், சினிமாவிலும் கடலளவு சம்பாதித்தார் – தனக்கென ஏதுமில்லாது அத்தனை செல்வத்தையும் தானம் செய்தார்.

அதுவரையில், கட்டைக் குரலில் ஆவேசமாக முழங்கிய எந்த சீர்திருத்தவாதியும் எடுபடாமல் போன போது – அதே சீர்திருத்தக் கருத்துக்களை எளிமையான நகைச்சுவையோடு கலைவாணர் சொன்னபோது தென்னகமே அவரை ஆதரித்தது.

அப்போதைய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதருக்கு இணையான நட்சத்திர அந்தஸ்து, அப்போதைய கோடீஸ்வரர்களுக்கு இணையான பண வசதி, ஆதி காலத்துப் பாரி வள்ளலை மிஞ்சும் கொடைத்தன்மை, அக்கால பகுத்தறிவு வாதிகளே அண்ணாந்து நோக்குமளவு சீர்திருத்தக் கருத்துக்கள், நடிப்பு, நகைச்சுவை பாத்திர நடிப்பு, ஓடாத படங்களைக் கூட வெற்றிப் படமாக்கும் அளவுக்கு தரமான காமெடி!

இப்படி வெற்றிகரமாக வலம் வந்தவரின் வாழ்வில் ஒரு சோதனை. திரையுலகின் திருப்புமுனைக் காரருக்கு வாழ்விலே ஒரு கருப்பு முனை. அதுதான் லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு.

பத்திரிகையாளர் லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் கலைவாணரும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, மாவட்ட நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டு, உயர்நீதிமன்றத்திலும் தண்டனை உறுதியாகி, வெள்ளைக்காரன் ஆட்சியிலே இந்தியாவிலே சுப்ரீம் கோர்ட் இல்லாததால், லண்டன் சென்று வழக்கு நடத்தி அதிலே ஜெயித்து விடுதலையாகி வெளியே வந்தவர்தான் என்.எஸ்கே.

ஆனால் அந்த வழக்கு முடிந்து வெளியே வருவதற்குள் எவ்வளவு செலவுகள், எவ்வளவு விரயங்கள்,எவ்வளவு அலைச்சல்கள், எவ்வளவு மன வேதனைகள்!

அத்துணை இன்னல்களையும் கடந்து வந்த தியாகராஜ பாகவதர் பின்னர் அதிலிருந்து மீண்டு வராமல் வறுமையிலேயே மாண்டார். கலைவாணரோ சிறை மீண்டு திரும்பியும் கூட பழைய புகழ் மங்காதிருந்தார். மீண்டும் படங்களில் நடித்தார்.

அவரது மனைவி டி.ஏ. மதுரம் அம்மையாரோடு அவர் ஜோடியாக நடித்து மீண்டும் திரையுலகில் வலம் வந்தார். அத்தோடு சொந்தமாக படங்களையும் தயாரித்தார்.

சிவாஜியின் ஒப்பீடில்லாத திறமையை ஆரம்பக் கட்டத்திலேயே அடையாளம் கண்டு அவரைத் தனது சொந்தப் படமான பணம் எனும் படத்தில் ஹீரோவாக முதலில் ஒப்பந்தம் செய்தவர் கலைவாணர்தான்.

ஆனால் பராசக்தி படம் முதலில் வெளிவந்ததால் சிவாஜிக்கு அதுவே முதல் படமாக அமைந்தது. எம்ஜிஆரை வைத்து பைத்தியக்காரன் எனும் படத்தையும் எடுத்தார்.

மலையளவு சம்பாதித்து, கடலளவு தர்மம் செய்ததால், தனக்கென எதையும் சேமித்து வைக்காததால், கடைசிவரை கஷ்டத்தோடே வாழ்ந்து மறைந்தார் கலைவாணர்.

தர்மம் ஏதும் செய்யாமல் இருந்தால் அவர் பத்தாயிரம் கோடிக்கு அதிபதியாய் இறந்திருக்கலாம். ஆனால் அவரது ஈடு இணையற்ற கொடை உள்ளத்தால் பல்லாயிரம் நல்ல உள்ளங்களே கோயில்களாகவும் – அதிலே அவர் தெய்வமாகவும் இருந்து இன்னமும் வாழ்கிறார் கலைவாணர்.

Views: - 0

0

0