கொங்குநாடா… கேட்கும் போதே தலைசுத்துது : முதலமைச்சர் ஸ்டாலினின் சந்திப்பிற்கு பிறகு நடிகர் வடிவேலு பேட்டி

14 July 2021, 2:03 pm
vadivel - updatenews360
Quick Share

சென்னை : நல்லா இருக்கும் தமிழகத்தை ஏன் பிரிக்க வேண்டும் என்றும், இதனை கேட்கும் போதே தலை சுத்துவதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று சந்தித்த நடிகர் வடிவேலு, ரூ.5 லட்சத்தை கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது : கடந்த ஒன்றரை மாதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளார். அவரது குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து அவர் என்னிடம் பேசினார். அவரிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளேன்.

முதலமைச்சர் ஸ்டாலினின் ஒவ்வொரு செயல்பாடும் மெய்சிலிர்க்க வைக்கிறது. யார் மனதையும் புண்படுத்தாமல் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் நெகிழ வைக்கிறது. மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி நலமாக இருக்க வேண்டும். மாஸ்க் போட மாட்டேன்… போ அண்ணே.. போ அண்ணே… இது தேக்கு என்று சொல்கிறார்கள். ஆனால், தேக்கையும் இந்த கொரோனா அரித்து விடும். நல்லா இருக்கும் போது எதற்கு தடுப்பூசி என்கிறார்கள். வருமுன் காப்பதே சிறந்தது, எனக் கூறினார்.

கொங்குநாடு குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதிலாவது, “ராம்நாடு, ஓரத்தநாடுனு இங்கு பல நாடுகள் உள்ளன. நல்லா இருக்கிற தமிழ்நாட்ட எதுக்கு பிரிச்சுக்கிட்டு? நான் அரசியல் பேசல.. ஆனா இதெல்லாம் கேட்கும் போது தலை சுத்துது,” என்றார்.

மேலும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஓடிடிக்கு நாம் மாறிக் கொள்ள வேண்டும், எனவும் நடிகர் வடிவேலு கூறினார்.

Views: - 167

1

0