‘அரசியலுக்கு வரும் போது சொல்றேன்’… முதலமைச்சர் ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் விஜய் சேதுபதி பேச்சு..!!

Author: Babu Lakshmanan
30 March 2023, 9:46 pm
Quick Share

எங்கேயும், எப்போதும் இன்னொரு மனிதன் ஒடுக்கப்படுவதும், நசுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மதுரையில் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 70 ஆண்டு கால சரித்திர சாட்சியம் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை”* என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி மதுரை யாதவா ஆண்கள் கல்லூரி எதிரில் உள்ள மேனேந்தல் மைதானத்தில் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்தது. 10வது நாளாக இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது:- புகைப்படங்கள், மிசா சிறைச்சாலை வடிவமைப்பு உள்ளிட்டவைகள் மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நமது வரலாறு என்பது நம்மை யார் ஆண்டார்கள், யார் ஆள்கிறார்கள் என்பதில் இருக்கிறது. எனவே. அவர்களை பற்றி கொள்ள வேண்டியது எல்லோருக்கும் அவசியம்.

உலகத்திலேயே திமுகவில் தான் முதன்முதலாக இளைஞரணி துவங்கப்பட்டது என்ற விபரம், திமுக ஆட்சி காலத்தில் அதிகமான பாலங்கள் கட்டியது, பெரியார், அண்ணா போன்ற தலைவர்களுடன் அவர் இருந்த காட்சிகள் ஈர்க்கும் வகையில் இருந்தது.
எனக்கு முதலமைச்சர் மேல் ஏற்கனவே மரியாதை உண்டு. இந்த கண்காட்சியை பார்த்த பின்னர், அவர் வாரிசு அரசியல் மூலம் தான் இந்த இடத்திற்கு வந்தார் என்ற கூற்று பொய் என தோன்றுகிறது.

நான் அரசியலுக்கு வரும் போது இந்த அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்து சொல்வேன். அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை, என தெரிவித்தார்.

ரோகிணி திரையரங்கில் நரிக்குறவ மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு, “எங்கேயும், எப்போதும் இன்னொரு மனிதன் ஒடுக்கப்படுவதும், நசுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பூமி அனைத்து மனிதர்களும் ஒன்றாக வாழ்வதற்காக படைக்கப்பட்டு உள்ளது. அதில் வேற்றுமையை யார், எந்த வகையில் செய்தாலும் ஏற்க முடியாது” என்றார்.

Views: - 287

0

0