திமுக அரசைக் கண்டித்து டிச.,9ம் தேதி அதிமுக போராட்டம்:ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு!!

Author: Udhayakumar Raman
6 December 2021, 11:11 pm
EPS OPS - Updatenews360
Quick Share

சென்னை: மக்கள்‌ நலன்‌ காக்கும்‌ பல்வேறு பணிகளை செய்யத்‌ தவறி வரும்‌ திமுக அரசைக்‌ கண்டித்து ,அதிமுக சார்பில்‌ வரும் 9ம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதிலும், தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலோ, மக்களின் அன்றாட தேவைகளையும், அவர்கள் சந்திக்கும் ஏராளமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதிலோ மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறிதும் அக்கறை கொள்ளாமல் வாய் சவடால் ஆட்சி நடத்திகொண்டிருப்பதை அதிமுக கண்டிக்கிறது. அரசின் இந்த அலட்சியப் போக்கினை எதிர்த்து போராட முழு ஆற்றலையும் பயன்படுத்துவோம்.

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகைளை உடனடியாக குறைக்கவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கவும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்குப் போதுமான இழப்பீடு அளிக்கவும், பொங்கல் விழாவைக் கொண்டாட உதவும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அளிக்கவும், அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடுவதைக் கண்டித்தும், அரசின் அலட்சியத்தால் கடுமையாக உயர்ந்திருக்கும் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வை எதிர்த்தும், தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வலியுறுத்தியும், அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் டிசம்பர் 9ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Views: - 232

0

0