அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்… யாரெல்லாம் போட்டியிடலாம் ; ஜெயக்குமார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Author: Babu Lakshmanan
17 March 2023, 9:45 pm
Quick Share

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்ததை தொடர்ந்து பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே இருந்து வருகிறது. இது கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் வெளிப்பட்டது. அதோடு, அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்..

எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் இந்த செயலை எதிர்த்து நீதிமன்றங்களில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வழக்கு போட்டும், அதில் எதிர்பார்த்தது நடக்கவில்லை. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நடத்திய பொதுக்கூட்டம் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது.

நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுக பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கட்சியின் சட்ட விதியின்படி பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை ரூ.25000 செலுத்தி விருப்ப மனு பெறலாம். நாளை காலை 10 மணி முதல் 19ம் தேதி பிற்பகல் 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். 20ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் 21ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் திரும்ப பெறலாம்.

மார்ச் 26ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 27ம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் 27ம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், பேசிய அவர், ஜனநாயக முறையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளதாகவும் கூறினார்.

Views: - 47

0

0

Leave a Reply