எடப்பாடியார் தலைமையில் 3வது முறையாக அதிமுக ஆட்சி அமைவது உறுதி : அமைச்சர் விஜயபாஸ்கர்

Author: Babu Lakshmanan
18 March 2021, 7:53 pm
mr vijayabaskar - updatenews360
Quick Share

கரூர் : ஹாட்ரிக் சாதனையாக மூன்றாவது முறையாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமையும் என கரூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக வேட்பாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கரூரில் உள்ள கிழக்கு கௌரிபுரம், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஈடுபட்டார். அப்போது, கற்பக விநாயகர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, பொதுமக்கள் ஆரத்தி எடுத்தனர்.

பின்னர், பொதுமக்களிடையே அவர் பேசியதாவது :- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் மறைந்து விட்டாலும், இந்த இயக்கம் இருக்குமா… நிலைக்குமா… நீடிக்குமா… என்று கேள்வி செய்தவர்கள் மத்தியில், அதன் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான திட்டங்களை வழங்கியும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தினார்.

அதன் காரணமாகவே, ஹாட்ரிக் சாதனையாக மூன்றாவது முறையாக எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும். மேலும், எல்லா மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக ஆட்சி நிறைவு செய்கின்ற பொழுது, திட்டங்களை கொடுத்து எதிர்க்கட்சியினர் வாக்குறுதிகளை தவிடு பொடியாக்கியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இனிமேல் தமிழகத்தில் ஏழை மக்களுக்கு செய்யும் திட்டம் இல்லை. அனைத்தும் எடப்பாடி பழனிசாமி செய்து விட்டார்.

ஒரே மேடையில் விவாதிக்க செந்தில்பாலாஜி தயாரா…? கடந்த 15ம் தேதி என்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி மீது 3 கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஏற்கனவே, செந்தில் பாலாஜி மீது 34 வழக்குகள் உள்ள நிலையில், இன்னும் ஓரிரு தினங்களுக்குள் பல்வேறு வழக்குகள் அவர் மீது வரவுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததால் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் பெருகிவிடும். கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் கூட்டணி கட்சி ஒரு தொகுதியிலும், 3 தொகுதியில் அதிமுக போட்டியிடும் தொகுதிகளில், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி என, அப்பொழுது தெரிவித்தார்.

Views: - 83

0

0