அதிமுக அவைத் தலைவர் பதவியா…? சாகும் வரையில் அது எனக்கு மட்டும்தான் : மதுசூதனன் திட்டவட்டம்..!

Author: Babu
6 October 2020, 4:05 pm
madhusudhanan - updatenews360
Quick Share

சென்னை : அதிமுக அவைத் தலைவர் பதவியை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று மதுசூதனன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளுக்குள்ளேயும் அதற்கான நடவடிக்கைகள் தடபுடலாக நடந்து வருகிறது. தற்போது, அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகிறது. இதற்காக, அமைச்சர்கள் குழுவினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனை, அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்க, கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், அதிமுக அவைத் தலைவர் பதவியை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று மதுசூதனன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுக அவைத் தலைவர் பதவியை என்னிடம் இருந்து எவனாலும் பறிக்க முடியாது. அவைத் தலைவர் பதவியில் இருந்து நான் மாற்றப்படுவதாக வெளியான தகவல் தவறு. மதுசூதனன் சாகும் வரை அவர்தான் அவைத் தலைவர் என ஜெயலலிதாவே கூறியிருக்கிறார். அதிமுக அவைத் தலைவர் பதவியில் பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையனை நியமிக்க சசிகலா திட்டமிட்டார். சசிகலா எவ்வளவோ கூறியும் என்னை அவைத் தலைவர் பதவியில் நீடிக்குமாறு செய்தவர் ஜெயலலிதா,” எனக் கூறியுள்ளார்.

Views: - 37

0

0