அமைச்சராக இருந்த போது கிராம சபை கூட்டத்திற்கு ஸ்டாலின் சென்றதுண்டா? அமைச்சர் சவுக்கடி!!

25 January 2021, 2:42 pm
Stalin- Updatenews360
Quick Share

தூத்துக்குடி : மு.க.ஸ்டாலின் 5 ஆண்டுகள் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது ஏதாவது ஒரு கிராம சபைக் கூட்டத்திற்கு அவர் சென்றது உண்டா என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி சிதம்பர நகரில் புதிதாக கட்டியுள்ள தனராஜ் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார்.

பின்னர் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வரஇருக்கின்ற 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு மக்களை சந்திக்கின்ற பணியில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 234 தொகுதிகளிலில் பிரச்சாரம் செய்வது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், 2011இல் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என பிரச்சாரம் மேற்கொண்டார்கள் அப்போது அதிமுக தான் வெற்றி பெற்றது.

2016 இல் அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கு ஒத்திகை எல்லாம் பார்த்தார்கள் அப்போது அதிமுக இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. வழக்கம்போல திமுக ஆட்சிக்கு வரும் என்ற மாயையை ஏற்படுத்துவார்கள். அதனால் தொடர்ந்து அதிமுக வெற்றி பெறும் இதுதான் நடைமுறை. 2021 மூன்றாவது முறை அதிமுக வெற்றி பெற்று சாதனை படைக்கும் என்றார்.

22 ஆயிரம் கிராமசபை கூட்டத்தை கூட்டியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது குறித்து கேட்டதற்கு, மக்கள் ஏமாளி என்று நினைத்தால் ஸ்டாலின் தான் ஏமாறுவார் அவர் உள்ளாட்சித்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் இருந்த பொழுது ஏதாவது ஒரு கிராம சபைக் கூட்டத்திற்கு அவர் சென்றது உண்டா என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

கிராம சபைக் கூட்டத்திற்கு நூறு, இருநூறு வழங்கி திமுகவினரை வைத்து கிராம சபை கூட்டத்தை நடத்துகின்றனர் என அமைச்சர் குற்றம்சாட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சின்னப்பன் எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0