2ஜி மேல்முறையீடு… திமுகவினரின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதற்கு சமம் : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
10 December 2020, 11:49 am2ஜி அலைக்கற்றை வழக்கு மேல்முறையீட்டுக்குச் சென்றுள்ளதால் தி.மு.கவினரின் தலையின் மேல் கத்தி தொங்குவதாகவும், இதனால் தி.மு.க வினரின் வாக்கு வங்கிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜென்ரலும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான இராஜாஜி என்று அனைவராலும் அழைக்கப்படும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி அவர்களின் 142வது பிறந்தநாள் விழா அரசு நிகழ்ச்சியாக இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை பாரி முனையில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயகுமார், பெஞ்சமின், பாண்டியராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் ஜெயகுமார் பேசியதாவது :- இராஜாஜியின் புகழ் இந்த மண்ணில் என்னென்றும் நிலைத்திருக்கும். நாட்டிற்கு அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, மறைந்த தலைவர்களைப் பற்றி அவதூறு பேசக்கூடது என உச்ச நீதிமன்றமே கூறியிருந்தும், ஆ. ராசா அதனை பின்பற்றாமல் பேசி வருகிறார். ஊழலின் ஒட்டுமொத்தமான கருணாநிதியைப் பற்றி பேச நிறைய உள்ளது. ஆனால், தங்கள் கட்சியினர் பக்குவப்பட்டவர்கள் என்பதால் மறைந்த தலைவர்களைப் பற்றி பேசமாட்டோம்.
மேலும், நடந்து முடிந்த வழக்கைப் பற்றி பேசும் ஆ. ராசாவின் பயம் அவர் பேச்சிலேயே தெரிகிறது. 2ஜி அலைக்கற்றை விவகாரம் மேல்முறையீட்டிற்குச் சென்றுள்ளதால், தி.மு.க வினரின் தலையின் மேல்கத்தி தொங்குகிறது. இதனால் அவர்களின் வாக்கு வங்கிக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஊழல் குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் தி.மு.க வினர் மீதே உள்ளது. அ.தி.மு.க வினர் மீது அப்படி எந்த வழக்கும் இல்லை.
அதேபோல், ஜெயலலிதா மரணம் குறித்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய தீர்ப்பு கிடைக்கும். அண்ணா பல்கலை., துணை வேந்தர் சூரப்பா விவகாரம் குறித்து, முதலமைச்சரிடத்தில் ஆளுநர் எந்த விசாரணையும் நடத்தவில்லை. ஆளுநர் விசாரித்ததாக வந்த தகவல் அனுமானத்தின் அடிப்படையில் வந்த தகவல் மட்டுமே, எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
0
0