திமுக நடத்தியது செம்மொழி மாநாடு அல்ல குடும்ப மாநாடு : அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!!

By: Udayachandran
10 October 2020, 1:02 pm
Madurai Sellur Raju - Updatenews360
Quick Share

மதுரை : தமிழை காப்பாற்றுவதாக கூறும் திமுக செம்மொழி மாநாடு என்ற பெயரில் குடும்ப மாநாடு நடத்தியது என அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மீனாட்சியம்மன் – சுந்தரேசுவரர் கோவிலிலை சுற்றி 4 சித்திரை வீதிகளில் கருங்கற்கள் பதிக்கும் பணியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில், மதுரையில் நடைபெற்று வரும் 8 ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 8 கோடியே 57 இலட்சம் மதிப்பில் மீனாட்சியம்மன் கோவிலிலை சுற்றி கருங்கற்கள் பதிக்கும் பணி நடைபெறுகிறது, பாண்டிய மன்னர்கள் காலத்தில் இருந்த மழை நீர் வடிகால் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு போதிய அளவில் விளக்கம் கொடுக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தல் வருவதால் திமுக ஊழல் குற்றச்சாட்டை கூறி வருகிறது, வெளிப்படையாக அனைத்து பணிகளும் நடைபெறுகிறது என்றும் விளக்கம் அளித்தார்.

தீபாவளி பண்டிகை வர்த்தகத்திற்க்காக 4 மாசி வீதிகளில் நடைபெறும் சாலை மற்றும் பாதாள சாக்கடை பணிகள் வரும் 15 ஆம் தேதி முதல் 1 மாதத்திற்கு நிறுத்தப்படும் என்று தெரிவித்த அவர், மதுரையில் நடைபெற்று வரும் 8 ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் 2021 எப்ரல் மாதத்திற்கு உள்ளாக முடிக்கப்படும் என கூறினார்.

அதிமுகவில் அறிஞர் அண்ணா காலம் முதலே தமிழுக்கு மட்டுமே முன்னுரிமை, திமுக செம்மொழி மாநாடு என்கிற பெயரில் குடும்ப மாநாடு நடத்தியது. தமிழ் அறிஞர்களுக்கு மேடையில் இடம் கொடுக்காமல் கீழே அமர வைத்து அவமரியாதை செய்தது.

தமிழுக்கு முதல்வர் முன்னுரிமை கொடுத்து வருகிறார், பிரதமர் தமிழின் பெருமை குறித்து இந்தியா முழுதும் பேசி வருகிறார், வெளி மாநிலங்களில் தமிழை நடைமுறைக்கு கொண்டு வர முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார், காலம் காலமாக தலித் ஊராட்சி மன்ற தலைவர் அவமதிப்பு செய்யப்பட்டனர் என தெரிவித்தார்.

தலித் ஊராட்சி மன்ற தலைவருக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும், தலித் ஊராட்சி தலைவருக்கு அனைத்து உரிமைகளும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை, இன்றைய காலகட்டத்தில் தலித் மக்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர் என கூறினார்.

Views: - 74

0

0