பீகார், மேற்கு வங்கத்தை அடுத்து தமிழகம்..! ஒவைசியின் திட்டத்தால் கதிகலங்கும் ஸ்டாலின்..?

12 November 2020, 5:02 pm
Asaduddin_Owaisi_UpdateNews360
Quick Share

நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி ஏற்படுத்திய தாக்கத்தால் தேஜஸ்வி யாதவின் ஆட்சியை பிடிக்கும் கனவு கானல் நீராகி போனதாக கருதப்படும் நிலையில், ஒவைசி அடுத்த கட்டமாக மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் கால் பாதிப்பதோடு, தமிழகம் மற்றும் கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்களிலும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது இங்குள்ள பல அரசியல் கட்சியினரை கதிகலங்க வைத்துள்ளது.

அடிப்படையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, தெலுங்கானாவில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் ஹைதராபாத்தில் தனது மட்டுமே தனது செயல்பாட்டை வைத்திருந்த நிலையில் சமீப காலங்களில் நாடு முழுவதும் தனது கரங்களை நீட்டி, இஸ்லாமிய வாக்குகளை கபளீகரம் செய்வது, சிறுபான்மையினரின் ஓட்டுக்களை பெற்று வந்த கட்சிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.  

பீகாரில் ஒவைசியின் செல்வாக்கு :

பீகார் சட்டசபைத் தேர்தலில் வாக்குகளை பிரித்து வெற்றி தோல்வியை மாற்றியதாக கூறப்படும் இரண்டு முக்கிய நபர்கள் அசாதுதீன் ஒவைசி மற்றும் சிராக் பஸ்வான்.

இதில் சிராக் பஸ்வான் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தவில்லையென்றாலும், ஒவைசி முஸ்லீம்கள் அதிகம் வாழும் சீமாஞ்சல் பகுதியில் பெரிய மாற்றத்திற்கு வித்திட்டுள்ளார்.

கடந்த 2015 சட்டசபைத் தேர்தலில் முதன்முதலாக பீகாரில் போட்டியிட்ட ஒவைசியின் கட்சி பெற்ற இடங்கள் பூஜ்ஜியம் மட்டுமல்ல, எங்கும் டெபாசிட் கூட பெறவில்லை. ஆனால் திட்டமிட்டு உழைத்ததால் அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தைக் கைப்பற்றியது.

சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக பீகாரின் அனைத்து கட்சிகளுடனும் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சியின் பீகார் தலைவர் கூட்டணிக்கு தயாராக இருப்பது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் மனம் தளராத ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட இதர கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலில், சீமாஞ்சல் பகுதியில் 14 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. இதில் ஐந்து இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. மேலும் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிக வாக்குகளைப் பெற்று, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் ஆட்சியமைக்கும் கனவை முறியடித்துள்ளது.

இதற்கு காரணமாக, இஸ்லாமியர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளை தேர்ந்தெடுத்து, சிறப்பாக களப்பணியாற்றியது தான் எனக் கூறப்படுகிறது.  குறிப்பாக சிறுபான்மை விவகாரங்கள் மட்டுமல்லாது, சீமாஞ்சல் பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்காகவும் களத்தில் இறங்கி குரல்கொடுத்தது தான் சீமாஞ்சல் பிராந்தியத்தில் ஒவைசியின் வளர்ச்சியை உறுதி செய்துள்ளது என பேசப்படுகிறது. 

ஓவைசியின் இந்த அசுர வளர்ச்சியால், காலங்காலமாக சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்று வந்த கட்சிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஒவைசி :

பீகார் தேர்தல் திட்டமிட்டபடி முடிந்த நிலையில், பீகாரில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் சீமாஞ்சல் பகுதியை ஒட்டி மேற்கு வாங்க எல்லைக்குள் உள்ள இஸ்லாமிய ஆதிக்கம் நிறைந்த பகுதிகளிலும் ஏற்கனவே ஒவைசி பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் குறிப்பாக 46 தொகுதிகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளதால், ஒவைசியின் வருகை, தற்போது மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2011’இல் 34 ஆண்டு கால கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த மம்தா பானர்ஜிக்கு அப்போது சிறுபான்மையினரின் வாக்குகள் மிகவும் உதவியது. இந்நிலையில் ஒவைசியால் சிறுபாண்மை வாக்குகள் பிரிந்தால், அது பாஜகவை எளிதாக ஆட்சிக் கட்டிலில் அமர்த்திவிடும் என்பதால் மம்தா பானர்ஜி செய்வதறியாது திகைத்துப் போயுள்ளதாக கூறப்படுகிறது.


மேற்கு வங்கத்திற்கு அடுத்து என்ன திட்டம் ?

மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து, ஒவைசியின் பயணம் உத்தரபிரதேசம் நோக்கி இருப்பதாக கூறப்பட்டாலும், தென்னிந்தியாவில் அவர் கால் பாதிக்க திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசப்படுகிறது.

குறிப்பாக முஸ்லீம்கள் ஆதிக்கம் நிறைந்த கேரளா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் கட்சியை வலுப்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஸ்டாலினை கதிகலங்க வைக்கும் ஒவைசி :

தமிழகத்தைப் பொறுத்தவரை, இஸ்லாமியர்கள் பெரும்பாலும் திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பவர்களாகவே உள்ளனர். குறிப்பாக வேலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் இஸ்லாமியர்களின் வாக்குகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் ஒவைசி தமிழகத்தில் காலடி எடுத்து வைக்கும்போது, இஸ்லாமிய வாக்குகள் பிரிந்து ஒவைசியின் பக்கம் செல்லும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. மேலும் தமிழகத்தில் உள்ள இதர தலித் கட்சிகள் உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தால் திமுகவின் ஆட்சிக் கனவு பொசுங்கி விடும் என்பதால் ஸ்டாலின் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 11

0

0