அருந்ததியினரின் ஆதரவு பெற்ற அதிமுக : வெற்றிக்கு வலு சேர்க்கும் வாக்கு வங்கி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 March 2021, 12:26 pm
Arunthathiyinar Supports Admk -Updatenews360
Quick Share

கோவை : வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு என தமிழ்நாடு அருந்ததியர் சமுதாய அமைப்புகளின் கூட்டு குழு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அருந்ததியர் சமுதாய அமைப்புகளின் கூட்டு குழு சார்பில் கோவை ரேஸ் கோர்சில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அருந்ததியர் சமுதாய மகாசபை தலைவர் உக்கடம் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு அருந்ததியர் கூட்டு குழுவின் 55 அமைப்புகளின் சார்பில் தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளை செய்து வருகிறோம். அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து தொடர் பரப்புரை, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். தமிழகத்தில் உள்ள 59 லட்சம் அருந்ததியினர் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க உள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. கோவையை பொறுத்தவரை அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்துவரும் பணிகள் வரலாற்று சிறப்புமிக்கது.

தொண்டாமுத்தூர் மட்டுமல்லாமல் கோவை மாவட்டம் முழுவதும் மக்கள் மேம்பாட்டு பணிகளை அவர் திறம்பட செய்து வருகிறார். மத்திய அரசின் உளவுப் பிரிவு பெயரில் சமூக வலைத்தளங்களில் திமுக கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என சமூக விரோதிகள் சிலர் சமூக வலைதளத்தில் பரப்ப விட்டுள்ளனர். அவர்கள் யார்? என கண்டறிந்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக கோவை மாநகர ஆணையரை சந்தித்து புகார் அளிக்க உள்ளோம். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில், அருந்ததியர் முன்னேற்ற கழக தலைவர் நாகராஜன், அருந்ததியர் சமுதாய நிர்வாகிகள் ராமச்சந்திரன் வடிவேல் ராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 62

0

0