திமுக நிர்வாகிகள் மீது மகளிர் வன்கொடுமை தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் : எம்எல்ஏ பூங்கோதைக்கு ஆதரவாக மனு அளிப்பு..!
20 November 2020, 2:07 pmதிமுக எம்எல்ஏ பூங்கோதையை தற்கொலைக்கு தூண்டிய அக்கட்சியின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை ஆட்சியரிடம் அருந்ததியர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் அவர்களின் தலைமையில் இயங்கும் திராவிட முன்னேற்ற கழக உயர்மட்ட நிர்வாகிகள் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயலாற்றி வருகிறார்கள். குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி இழிவாக பேசுவதும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட பஞ்சமிநிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை சாதி ரீதியாக இழிவாக நடத்துவதும், தாழ்த்தப்பட்ட நிர்வாகிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் தொடர்ந்து சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக, கடந்த கால காட்டங்களில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து திமுக நிர்வாகிகள், அவர்களது கட்சியில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருந்து வருகிறது. குறிப்பாக, சில தினங்களுக்கு முன்பு பிற்படுத்தப்பட்ட சமூதாயத்தைச் சேர்ந்த தென்காசி மாவட்டம் ஆலாங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ பூங்கோதை அவர்கள் நேற்று முன்தினம் அதிகளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அனைத்து நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் செய்தியாக வந்துள்ளது.
இது தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் மத்தியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து அச்சப்படவேண்டிய சூழ்நிலையில் ஏற்படுத்தியுள்ளது. காரணம் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஒருவருக்கு அவரது சொந்த கட்சியினரால் இழிவுப்படுத்தி அவரை காலில் விழவைத்து கையெடுத்து வணங்கி போதுமடா சாமி என்று அழும் அளவிற்கு செய்து, இதனை சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை தி.மு.க. கட்சித் தலைவர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களிடம் புகார் அளித்தும் கூட இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அக்கட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆக உள்ளது.
குறிப்பாக, திருமதி பூங்கோதை எம்.எல்.ஏ அவர்களின் தந்தை முன்னாள் அமைச்சர் மட்டுமின்றி, இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், கல்லூரிகளை நடத்தும் நிர்வாகியாக இருக்கும் இவருக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களுக்கு தி.மு.க. கட்சியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து தமிழக மக்கள் தாங்களே அறிந்து கொள்ள வேண்டும்.
எனவே, ஒரு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இன்றி தி.மு.க. வில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர் என்றுகூட பாராமல் தி.மு.க. வில் உள்ள பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட சமூக நீதிக்கு எதிராக உள்ளவர்களினால் தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டப்பட்டுள்ளார். எனவே, மாநில மகளிர் ஆணையமும், மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை மூலம் மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறோம், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
0
0