ஆலயம் அறக்கட்டளை சார்பில் முன்களப் பணியாளர்களுக்கு இலவச பாதுகாப்பு உபகரணங்கள் கோவை மாநகராட்சியிடம் வழங்கும் நிகழ்ச்சி!

26 August 2020, 2:12 pm
alayam 1- updatenews360
Quick Share

கோவை: ஆலயம் அறக்கட்டளை சார்பில் மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு முக கவசம் மற்றும் கையுறைகளை மாநகராட்சி ஆணையரிடம் ஆலயம் அறக்கட்டளையின் தலைவர் சந்திரசேகர் வழங்கினார்.

கோவையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கொடூர தொற்றான கொரோனா பரவல் காலத்திலும், ஏழை, எளிய மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் கபசுர குடிநீர், முகக் கவசங்கள், கையுறைகள் மற்றும் உணவுகளும் எங்களது அறக்கட்டளையின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

கொரோனாவிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வரும் ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை, இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களுக்கும் உதவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கோவை மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் உள்பட கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு முகக்கவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 3,000 முகக்கவசங்கள் மற்றும் 3,000 கையுறைகளை ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளையின் நிறுவனரும், தலைவருமான சந்திரசேகர், கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத்திடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆலயம் அறக்கட்டளையின் அறங்காவலர் ஆலயம் கார்த்திக் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சி ஆணையர் நம்மிடம் கூறியதாவது :- ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்டத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கன்வாடி போன்ற குழந்தைகள் பராமரிப்பு மையங்களும் உயர்தர வசதிகளுடன் செய்து தந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், வடவள்ளி பகுதியில் ஆம்புலன்ஸ் சேவை போன்ற மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஆலயம் அறக்கட்டளை செய்து வருகிறது.

மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு முகக்கவசங்கள் தேவை இருந்தது. கொரோனா காலத்தில் அடிப்படை தேவையான முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை வழங்கியது இந்த வேளையில் மகிழ்ச்சியளிக்கிறது. கோவை மாநகராட்சியின் சார்பில் ஆலயம் அறக்கட்டளையினருக்கு பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன், எனக் கூறினார்.

Views: - 0 View

0

0