அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்கும் முயற்சி: கோவையில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி..!!
Author: Rajesh27 ஜனவரி 2022, 11:01 காலை
கோவை: அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்கும் விதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் கோவையில் நாட்டுப்புற கலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆடி அசத்தினர்.
தமிழகத்தில் பாரம்பரியம் சார்ந்த நாட்டுப்புற கலைகளை இன்றைய தலைமுறையினர் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரியம் கலாச்சாரம் பண்பாடுகளை பறைசாற்றும் விதமாக நாட்டுப்புறக் கலைகளை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையை அடுத்த காடம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.
கிராமிய புதல்வன் அகாடமியின் நிறுவனத்தலைவரும், நாட்டுப்புற கலைஞருமான கலையரசன் ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி, சேலம் என பல்வேறு பகுதிகளில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் கலந்துகொண்டனர். இதில் பறையாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம், தேவர்ஆட்டம், அம்மன் நடனம், காளி திருநடனம், புலியாட்டம் என பல்வேறு பல்வேறு நடனக்கலைகளை கிராமிய கலைஞர்கள் ஒப்பணைகளுடன் ஆடி அசத்தினர்.
தொடர்ந்து கிராமிய கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அனைவருக்கும் பல்வேறு கலை சார்ந்த விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
1
0