குருவி கூட்டை கலைக்காமல் நெல் அறுவடையை முடித்த தமிழக விவசாயி! ஆனந்த் மஹிந்திரா பாராட்டு

26 February 2021, 9:14 am
Quick Share

கும்பகோணம் அருகே குருவி கூட்டை கலைக்காமல் நெல் அறுவடையை செய்து முடித்த விவசாயி ஒருவர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். நெட்டிசன்சன்கள் அவரை புகழ்ந்து தள்ள, ஆனந்த் மஹிந்திரா, தன் பங்குக்கு அவரை ‛சுற்றுச்சூழல் ஹீரோ’ என வாழ்த்தி உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த ரங்கநாதன் (வயது 40) என்பவர், தனது 3 ஏக்கர் வயலில், நெல் பயிர் செய்திருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் அறுவடை இயந்திரம் கொண்டு, நெல் அறுவை செய்த வயலுக்கு சென்ற போது, நெற்கதிர்களுக்கு இடையே, 3 அடி உயரத்தில் குருவி கூடு ஒன்று இருந்திருக்கிறது. கூட்டிற்குள் 4 குருவி முட்டைகளும் இருந்திருக்கின்றன.

கூடு சாய்ந்து விடாமல் இருக்க அதனுடன் 2 கம்புகளை பாதுகாப்பாக நிற்க வைத்துவிட்டு, கூடு இருந்த இடத்தை தவிர, மற்ற இடங்களில் அறுவடையை முடித்து வீடு திரும்பியிருக்கிறார். இந்த விஷயம் அறிந்த அக்கம் பக்கத்தினர், ரங்கநாதனுக்கு பாராட்டு தெரிவிக்க, சமூக வலைதளங்களிலும் பரவ துவங்கியது. மஹிந்திரா நிறுவனத்தின் நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா, இவர் குறித்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து, இன்றைய காலகட்டத்தில் பூமிக்கு இவர் போன்ற ஆட்கள் தான் தேவை எனக்கூறி, ரங்கநாதனை ‛சுற்றுச்சூழல் ஹீரோ’ என வாழ்த்தி உள்ளார்.

அவரது பதிவுக்கு கீழ், பறவைகள், விலங்குகளுக்கு எவ்வாறு எல்லாம் உதவலாம் என பலரும் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். நம்நாடு மற்றும் சுற்றுச்சூழலில் உண்மையான ஹீரோக்கள், விவசாயிகள் தான் என சிலர் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

Views: - 6

0

0