போன் செய்ய செல்போனைத் தராததால் ஆத்திரம் : முதியவர் சரமாரியாக வெட்டிப் படுகொலை…

Author: kavin kumar
10 January 2022, 10:32 pm
Quick Share

தூத்துக்குடி: சாயர்புரம் அருகே பேசுவதற்கு செல்போன் கேட்டு தராததால் முதியவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தியிலிருந்து மீனாட்சிபட்டி செல்லும் சாலையில் உள்ள ஓடை பாலம் அருகே பெருங்குளம் பகுதியை சேர்ந்த நாகபத்திரம் (65) என்பவர் நேற்று மர்ம நபரால் அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சாயர்புரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் மேற்பார்வையில் சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அதில், நட்டாத்தி ஓடை பாலம் அருகிலுள்ள காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றி திரிந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் தங்கராஜ் (எ) தங்கம் கொம்புகாரன்பொட்டல் என்பதும், அவர் கொலையுண்ட நாகபத்ரத்திடம் நட்டாத்தி ஓடைபாலம் அருகே மேய்ச்சலுக்காக விட்டிருந்த தனது மாடுகளை தேடி வந்தபோது, அங்கு வந்த தங்கராஜ், நாகபத்ரத்திடம் ஒரு போன் செய்ய வேண்டும் என்று கூறி அவருடைய செல்போனை கேட்டுள்ளார்.

நாகபத்ரம் தர மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டு தகராறு ஆகியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ் நாகபத்ரத்தை வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு, அவருடைய செல்போனையும் பறித்து சென்றுள்ளதும் தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் தங்கராஜை கைது செய்து அவரிடமிருந்த கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாளையும், செல்போனையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலை குற்றவாளியை துரிதமாக செயல்பட்டு உடனடியாக கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.

Views: - 266

0

0