அண்ணா பல்கலை., உயர் சிறப்பு அந்தஸ்து விவகாரம் : அரசின் முடிவுக்கு முக ஸ்டாலின் வரவேற்பு..!!

Author: Babu
16 October 2020, 3:56 pm
Stalin 01 updatenews360
Quick Share

சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி அதன் துணைவேந்தர் சூரப்பா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அரசிடம் எந்தவிதமான ஆலோசனையும் பெறாமல் இதுபோன்ற கடிதத்தை அவர் எழுதியுள்ளதாக தமிழக அரசு குற்றம்சாட்டி வந்தது. மேலும், அரசின் சார்பிலும் இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்சிறப்பு அந்தஸ்து வழங்கி, மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் இக்கல்வி நிறுவனத்தை கொண்டு சேர்க்க துணைவேந்தர் சூரப்பா முடிவு செய்துள்ளதாகக் கூறி, தமிழகத்தில் 27 மாவட்டங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்றும், சிறப்பு அந்தஸ்தினால் கிடைக்கும் பலனை, மாநில அரசினாலேயே வழங்க முடியும் என தெரிவித்தது. மேலும், இடஒதுக்கீடு பாதிக்கப்படவும், கட்டண உயர்வுக்கும் தமிழக அரசு துணை போகாது என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்ற தமிழக அரசின் முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில், “அரசின் முடிவு காலதாமதமானாலும் வரவேற்கத்தக்கது. தமிழக அரசின் முடிவு உடனடியாக கடிதம் மூலம் மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும். மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய பரிந்துரைக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 47

0

0