அன்னூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு.. 34 கி.மீ. விவசாயிகள் நடைபயணம்.. விநாயகர் கோவிலில் மனு கொடுத்து நூதன போராட்டம்!!

Author: Babu Lakshmanan
5 December 2022, 8:04 pm
Quick Share

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் சிப்காட் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் பாதையாத்திரையாக 34 கிலோமீட்டர் நடந்து சென்று புலியகுளம் விநாயகர் கோவிலில் மனு அளித்து வழிபாடு நடத்தினர்.

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கிட்டத்தட்ட 4000 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைப்பதற்கான அரசாணையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு வெளியிட்டது. தற்போது வருவாய்த் துறையின் மூலம் நிலம் கையகப்படுத்தும் பணியானது நடைபெற்று வரும் நிலையில், இதில் 3731 ஏக்கர் விவசாய நிலங்களை சிப்காட்க்காக அரசு கையகப்படுத்த முயல்வதாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்திற்கு பாஜக, நாம் தமிழர் உள்ளிட் பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வரும் ஏழாம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் அன்னூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்திய விவசாயிகள் இன்று அன்னூர் மண்ணீஸ்வரர் கோவிலில் இருந்து கோவை புலியகுளம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு பாதையாத்திரையாக விவசாயிகள் நடந்து சென்றனர்.

அதிகாலை ஆறு மணியிலிருந்து இரவு 6 மணி வரை, கிட்டத்தட்ட 34 கிலோமீட்டர் தூரம் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் பதாகைகளை ஏந்தி அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதையாத்திரையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் புலியகுளம் விநாயகர் கோவில் வந்தடைந்த விவசாயிகள், அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, விநாயகரிடம் மனு அளித்து வழிபாடு நடத்தினர்.

இதனை தொடர்ந்து பேசிய விவசாயிகள், அரசாணையை அரசாங்கம் திரும்ப பெற வேண்டும் எனவும் இல்லையென்றால் விளைவுகள் கடுமையாக இருக்கும் எனவும் எச்சரித்த விவசாயிகள், நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் தான் கடவுளிடம் மனு அளித்துள்ளதாகவும், கோவையில் உள்ள தொழில்துறையினரே தொழில் பூங்கா வேண்டாம் எனக் கூறிய பிறகு, எதற்காக இந்த தொழில்பூங்கா என கேள்வி எழுப்பினர்.

Views: - 178

0

0