தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு: மேலும் ஒருவர் கைது…சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை..!!

Author: Aarthi Sivakumar
14 August 2021, 4:27 pm
Quick Share

கோவை: தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து குற்றவாளிகள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இந்த வழக்கு விசாரணையானது சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பொள்ளாச்சியைச் சேர்ந்த அருளானந்தம், ஹேரேன்பால்,பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையானது கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், தற்போது வரை 9 பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு அண்மையில் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது சி.பி.ஐ தரப்பில் ஏற்கெனவே இந்த வழக்கில் கோவை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், ஆனால் சில விளக்கங்களை நீதிமன்றம் கேட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட அருளானந்தத்தின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ விரைந்து முடிக்கத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும், குறிப்பாக எஸ்.பி. அந்தஸ்திலான ஒரு அதிகாரியை நியமித்து உதவத் தயாராக இருப்பதாகவும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்க பட்டதையடுத்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க, கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதோடு சி.பி.ஐ யின் விசாரணைக்கு உதவும் வகையில் சி.பி.சி.ஐ.டி எஸ்.பி. முத்தரசியை நியமித்தும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அருண் குமார் என்ற நபரை கைது செய்த சி.பி.ஐ அதிகாரிகள் இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைத்தனர் . சி.பி.ஐ அதிகாரிகளின் இந்த நடவடிக்கையின் மூலம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 343

0

0