இலவச வீட்டு மனைக்கு இடத்தை அளந்து கொடுக்க எதிர்ப்பு ; 5 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Author: Babu Lakshmanan
28 August 2021, 6:15 pm
ariyualur - updatenews360
Quick Share

அரியலூர் : அரியலூர் அருகே இலவச வீட்டு மனைக்கான இடத்தை அளந்து கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஐந்து பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஆதிச்சனூர் கிராமத்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். கடந்த 1996ம் ஆண்டு வீட்டு மனை இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை வழங்கும் வகையில், அப்பகுதியில் உள்ள மற்றொரு சமூகத்தினரிடம் இருந்து 50 ஆயிரம் என விலைகொடுத்து இரண்டரை ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது.

இதனையடுத்து நிலம் கொடுத்த விவசாயிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையை அதிகரித்து தரவேண்டுமென வழக்கு தொடுத்தனர். வழக்கின் விசாரணையில் கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசுக்கு சொந்தமானது என நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து, ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை அளந்து கொடுக்க பலமுறை வருவாய்த் துறையினர் முயற்சித்தும், இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறால் பிரச்சனை நீண்டு வந்தது.

இந்நிலையில் கையகப்படுத்திய நிலத்தை ஆதிதிராவிட மக்களுக்கு அளந்து கொடுக்கும் பணி இன்று காவல்துறையினரின் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் மேற்கொண்டனர். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிலம் கொடுத்த சமூகத்தைச் சேர்ந்த 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கலவரம் ஏற்படாத வகையில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். வருவாய்த்துறையினர் போலீசாரின் பாதுகாப்புடன் 66 பேருக்கு இலவச வீட்டு மனை அளந்து கொடுக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 269

0

0