விமானம் மூலம் துப்பாக்கி பவுடர் கடத்தல்: மும்பை பயணி கோவையில் கைது…தீவிர விசாரணை..!!

Author: Aarthi Sivakumar
6 December 2021, 2:36 pm
Quick Share

கோவை: விமான நிலையத்தில் துப்பாக்கி பவுடர் வைத்திருந்ததாக மத்திய பாதுகாப்பு படையால் ஒப்படைக்கப்பட்ட நபரை பீளமேடு காவல்துறையினர் வெடிபொருள் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையில் கடந்த 4ம் தேதி சர்வதேச விமான நிலையத்தில் மும்பை செல்ல வந்த பயணி ஒருவரை சோதனை செய்தபோது சந்தேகத்திற்கிடமான வகையில் சாம்பல், கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் பவுடர் பாக்கெட்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

7 பாக்கெட்டுகளில் மொத்தம் 2.5 கிலோ எடைக்கொண்ட அந்த பவுடர் வெடிப்பொருள் சம்மந்தமான குறிப்பாக துப்பாக்கி பவுடர் என எண்ணி பீளமேடு காவல்துறையினரிடம் மத்திய பாதுகாப்பு படையினர் அந்த பவுடரையும், பயணியையும் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்டவர் தெற்கு டெல்லி சத்தர்பூர் பகுதியை சேர்ந்த அருண் வரோரா (32) தாது பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தை நடத்தி வருபவர் என்றும், அப்போது இருடியம் பிளாட்டினம் ஆக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அருண் வரோரா, இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து சோதனைக்காக அந்த பவுடரை கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

மேலும், அதை கோவை தியாகி குமரன் வீதியிலுள்ள ஒரு தங்கம் டெஸ்டிங் சென்டரில் சோதனை செய்த நிலையில், அதில் சரியான முடிவு கிடைக்காத நிலையில் ஹைதராபாத் கொண்டு சென்று அங்கே சோதனை செய்ய வருண் முயற்சி செய்து வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஏற்கனவே இவர் கொச்சின் மற்றும் திருச்சியில் இந்த பவுடர்களை சோதனை செய்திருப்பதும், இரிடியம் மோசடியிலும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், அந்த பவுடர் வெடிப்பொருள் சம்மந்தமான மூலக்கூறுகள் உள்ளதாக விமான நிலைய மத்திய பாதுகாப்பு படை ஆய்வாளர் ஹெத்ராம் சியாக் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், வெடிப்பொருள் சட்டம் 5 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அருண் வரோராவை பீளமேடு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, அருண் வரோராவிடம் கைப்பற்றப்பட்ட பவுடரில் 85 சதவீதமான வெடிப்பொருள் சம்மந்தமான கலப்பு இருப்பதாகவும், இருப்பினும் அதை ஆதாரப்பூர்வமாக ஆவணப்படுத்த அந்த பவுடரை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Views: - 213

0

0