சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்: கோலாகலமாக தொடங்கியது தேரோட்டம்…!!

29 December 2020, 11:59 am
Quick Share

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நெடைபெற்றது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா விழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேரோட்டத்தில் பங்கேற்க வரும் வெளியூர், உள்ளூர் பக்தர்களுக்கு இ – பாஸ் முறை கட்டாயம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த முறையை ரத்து செய்ய கூறி தீட்சிதர்கள், பொதுமக்கள், பக்தர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இ – பாஸ் முறை ரத்து செய்யப்பட்டால் தான் கோயிலுக்குள் இருக்கும் சாமிகளை ஊர்வலமாக எடுத்து வந்து தேரில் வைத்து தேரோட்டத்தை நடத்துவோம் என்று தீட்சிதர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதன் காரணமாக, ஆண்டு தேரோட்டம் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பமான சூழ்நிலை இருந்தது. இதற்கிடையில் மாவட்ட நிர்வாகம் இ – பாஸ் முறை பின்பற்றப்படாது. பக்தர்கள் வழக்கம் போல் வரலாம் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தேரோட்டம் நடத்துவதற்கு தீட்சிதர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து, பெரிதும் எதிர்பார்த்த சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் 15,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். வீதிகளில் உலா வரும் சாமியை வரவேற்பதற்காக பக்தர்கள் தங்களது இல்லங்களுக்கு முன்பு வண்ண கோலங்களால் அலங்கரித்துள்ளனர்.

கொரோனா தடுப்பு தடவடிக்கையாக பக்தர்கள் முகக்கவசம் அணிந்து தேரினை இழுத்து சென்றனர். தேரானது மாடவீதியில் சுற்றி வந்த பிறகு, மாலை ஆயிரங்கால் மண்டபத்தில் 5 சாமிகளும் வைக்கப்படுவார்கள். அங்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். சிதம்பரம் நடராஜர் கோயிலின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் நாளை நடைபெறவிருக்கிறது.

Views: - 0

0

0