பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு : கோவையில் கொரோனா விதிகளுடன் கூட்டம்!!

9 November 2020, 12:41 pm
School Opinion - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

பொதுத் தேர்வு எழுதும் 9, 10,11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்துவது குறித்து பெற்றோரின் கருத்துகேட்புக் கூட்டம் இன்று நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

அதன்படி 16 மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகள், 11 மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் உட்பட கோவை மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் தலைமையில் இன்று கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும் என பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதன்படி பள்ளி வளாகம் முழுவதும் சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளித்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வருபவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு நுழைவுவாயிலில் தெர்மல் ஸ்கேனர் கொண்டு வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே, பெற்றோரை பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கூட்ட அரங்கு நுழைவுவாயிலில் கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்பு, அதிகபட்சம் 20 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் காலை 10 முதல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு வகுப்பு என, பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு கூட்டம் நடத்தப்படும். வகுப்பு வாரியாக பெறப்படும் தகவல்களை தலைமையாசிரியர்கள் தொகுத்து, மாலை 6 மணிக்கு முன்பாக முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Views: - 25

0

0