விவசாயிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கி ஏமாற்றிய காவல் உதவி ஆய்வாளர் : விவசாயி விஷமருந்தியதால் பரபரப்பு!!

7 October 2020, 1:40 pm
Farmer Suicide - updatenews360
Quick Share

சேலம் : ஏழு லட்ச ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு காவல் உதவி ஆய்வாளர் ஏமாற்றியதாக கூறி விவசாயி ஒருவர் காவல்நிலையம் முன்பாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாநகர் வீராணம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி என்பவரின் மகன் சதீஷ். இவர் தந்தைக்கு உறுதுணையாக விவசாயத்தை கவனித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வீராணம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக சத்தியமூர்த்தி பணியாற்றி வந்தார். அப்போது சதீஷ் வீராணம் காவல் நிலையத்தில் போலீஸ் நண்பர் குழுவில் இருந்து வந்தார் .

இதனால் காவல் உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்திக்கும் சதீஷ்குமார் இடையே நட்பு ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்தி உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி, சதீஷிடம் ஏழு லட்ச ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார் . இந்த கடன் தொகையை இதுவரை திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி சேலம் மாநகரில் உள்ள கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் சதீஷ் மீண்டும் சத்தியமூர்த்தியை நாடி தனது கடன் தொகையை கேட்டுள்ளார்.

இது குறித்து சதீஷ், சேலம் மாநகர காவல் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.ஆனாலும் முறையான நடவடிக்கை இல்லாததால் இன்று சதீஷ் , கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு வந்து அதன் நுழைவாயிலில் நின்று கொண்டு திடீரென தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டார்
இதனை கவனித்த அங்கிருந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் . இச்சம்பவம் கிச்சிபாளையம் காவல் நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது . இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 65

0

0