புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் அமளி துமளி : தொண்டர்கள் கைக்கலப்பு.. தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல்… 5 பேர் இடைநீக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2022, 7:53 pm
Pondy Cong - Updatenews360
Quick Share

காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் குண்டுராவ் தலைமையில் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் சுப்ரமணியன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, கூட்டத்தில் ஒரு தரப்பினர் மாநில தலைவரின் பதவிக் காலம் முடிந்து விட்டதால் அவரை மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறி அமளியில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூச்சலில் ஈடுபட்டதால் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினார். இதனைத்தொடர்ந்து மாநில தலைவரை மாற்ற வலியுறுத்தி நாராயணசாமிக்கு எதிரான தரப்பினர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து கூட்டம் முடிந்து கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த மேலிடப் பொறுப்பாளர் குண்டுராவை கட்சியினர் முற்றுகையிட்டனர்.
அப்போது, மாநில தலைவர் வாகனத்தில் ஏறிப் புறப்பட முயன்ற மேலிடப் பொறுப்பாளரைக் கட்சியினர் போக விடாமல் அவரது வாகனத்தை முற்றுகையிட்டு அவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனால், காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Views: - 2387

0

0