புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகரை கொலை செய்ய முயற்சி : காரை மறித்து கும்பல் செய்த வெறிச்செயல்!!

20 November 2020, 1:16 pm
Murder Attempt - Updatenews360
Quick Share

புதுச்சேரி : காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆறுமுகத்தை கொலை செய்ய திட்டமிட்டு அவர் வந்த கார் மீது 10 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் அவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

புதுச்சேரி இந்திரா நகர் தொகுதியில் 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் ஏ.கே.டி. ஆறுமுகம் (வயது 55). தற்போது காங்கிரஸ் கட்சியில் மாநில பொதுச்செயலாளராக உள்ளார். இவரது வீடு ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் புறவழிச்சாலையில் உள்ள சாய் பாபா கோயில் அருகே உள்ளது.

இந்நிலையில், இரவு ஐயங்குட்டிபாளையத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட பின்னர் தனது காரில் ஓட்டுநருடன் வீடு திரும்பி கொண்டிருந்தார். கம்பன் நகரில் ஆளில்லா ரயிவே கிராசிங்கை தாண்டி வீட்டின் அருகே வந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த 10பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து கற்களாலும், இரும்பு ராடாலும் தாக்குதல் நடத்தினர்.

இதில் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதில், சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி செல்ல முன்றார். இருப்பினும், ஒரு நபர் காரின் பின்பக்கத்தில் அமர்ந்திருந்த ஏ.கே.டி.ஆறுமுகத்தை கொலை செய்வதற்காக வீச்சறிவாளை எடுத்து வீசியுள்ளனர்.

இதனால் பக்கவாட்டில் இருந்த காரின் கண்ணடி உடைந்தது. ஆனால், ஓட்டுநரோ கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பலிடம் சிக்காமல் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். இதனால் ஏ.கே.டி.ஆறுமுகம் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதையடுத்து, அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இத்தகவல் பரவியதால் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் அவரது வீட்டிற்கு முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. தகவலின் பேரில் எஸ்பி லோகேஸ்வரன் மற்றும் முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து ஏ.கே.டி.ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் நடந்த இடம் இருட்டான பகுதி என்பதாலும், சிசிடிவி கேமிரா இல்லாததாலும் குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் காண்பதில் போலீசார் திணறி வருகின்றனர்.

Views: - 0

0

0