கோவையில் அம்மன் கோவிலை அகற்ற முயற்சி: ஆட்சியரிடம் இந்து முன்னணியினர் புகார்..!!
Author: Aarthi Sivakumar22 October 2021, 1:33 pm
கோவை: கோயிலை அகற்ற முயற்சி நடப்பதாக ஊர் பொதுமக்கள் சார்பில் இந்து முன்னணியினர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இந்து முன்னணி கோவை மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில் போத்தனூர் பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட அட்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பது, கோவை போத்தனூர் பாரத் நகரில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயிலுக்கு பாரத் நகர், எம்ஜிஆர் நகர், அன்னை சத்யா நகர், சிவசக்தி காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக இந்த கோயிலில் சித்திரை மாத திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாரத் நகரை சேர்ந்த ஒருவர் அவர் வீட்டில் ஜெப வீடு அமைத்து அப்பகுதி மக்களிடம் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் மதமாற்றம் செய்வதற்கு கோயில் இடையூறாக இருப்பதாக மதரீதியான காழ்ப்புணர்ச்சியில் கோயிலை அகற்ற முயற்சி நடக்கிறது. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதில் இந்து முன்னணி கோட்ட செயலாளர் சதீஷ், கோட்ட பேச்சாளர் கிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் தனபால் மற்றும் சுந்தராபுரம், போத்தனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
0