‘நா மட்டுமா வாங்கற.. தலையாரி 3 மாடியே கட்டிட்டாரு.. சின்ன விஷயத்த பெருசு பண்ணாத’ : ரூ.250 லஞ்சம் வாங்கிய விஏஓவின் ஆடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2022, 10:20 am
Vao Bribery - Updatenews360
Quick Share

மதுரை மாவட்டம் யாகப்பா நகரைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் குடும்பத்தை நடத்த போதிய வருமானம் இல்லாமல் அவர் கஷ்டப்பட்டு வந்துள்ளார். அப்போதுதான், அவருக்கு கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு அரசாங்கம் நிதியுதவி செய்வது தெரியவந்தது.

இதையடுத்து, கணவரால் கைவிடப்பட்டதற்கான சான்றிதழை வாங்க மேலமடை விஏஓ ரமணியை பஞ்சவர்ணம் அணுகியுள்ளார்.

ஆனால், விஏஓ ரமணியோ ரூ.250 லஞ்சம் கொடுத்தால் தான் சான்றிதழ் தருவேன் என கறாராக கூறியுள்ளார். மேலும், லஞ்சம் கேட்டு பல மாதங்களாக பஞ்சவர்ணத்தைஅவர் அலைகழித்தும் வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தனக்கு தெரிந்த தன்னார்வலர் ஒருவரிடம் பஞ்சவர்ணம் இதுகுறித்து கூறியுள்ளார். பின்னர், தன்னார்வலர் கொடுத்த யோசனையின் படி சில தினங்களுக்கு முன்பு விஏஓ ரமணியை சந்தித்த பஞ்சவர்ணம், அவர் லஞ்சமாக கேட்ட 250 ரூபாயை அவருக்கு கொடுத்துள்ளார். இதனை அவர் அருகில் இருந்த தன்னார்வலர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார்.

இதையடுத்து, அந்த வீடியோவை விஏஓ ரமணிக்கே அனுப்பிய தன்னார்வலர், அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அந்த ஆடியோ பதிவு தற்போதுவெளியாகியுள்ளது.

அதில், “எல்லா விஷயத்துக்கும் நீங்க லஞ்சம் வாங்குவீங்களாமே.. லஞ்சம் கொடுக்கலனா உங்கட்ட ஒரு வேலையும் நடக்காதாமே.. எல்லாருமே அப்படிதான் சொல்றாங்க.. உங்க தலையாரி கூட அப்படித்தான் என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் விஏஓ ரமணி, “நான் மட்டுமா லஞ்சம் வாங்குறேன். ஏன் அந்த தலையாரி வாங்குறதில்லையா.. தலையாரி லஞ்சம் வாங்காமலா மூணு மாடி வீடுகட்டிருக்காரு” என கூலாக கூறுகிறார்.

அப்போது தன்னார்வலர், “இந்த வீடியோவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப் போறேன்” என சொல்ல.. சட்டென பம்மிய விஏஓ ரமணி, “விடுப்பா., இந்த சின்ன விஷயத்த எல்லா பெருசா ஆக்கிட்டுஇருக்காதப்பா” என்கிறார். தற்போது இந்த வீடியோவும், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டதுடன் மட்டுமல்லாமல் அதை நியாப்படுத்தும் வகையில் பேசிய விஏஓ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Views: - 389

0

0