“அம்மா Im going to miss you.. love you” : நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த மாணவியின் மனதை உருக்கும் ஆடியோ..!

12 September 2020, 5:03 pm
Quick Share

“அம்மா நான் உன்னை பிரிந்து போகிறேன்.. எனக்கு கிடைத்த அழகான குடும்பத்தை பாதுகாத்துக்கொள்ள எனக்கு தெரியவில்லை” நீட் தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை செய்துகொண்ட ஜோதி துர்காவின் கடை மூச்சில் பதிவான பேச்சில் மனதை உருக்கிய வார்த்தைகள்.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் முருகசுந்தரம். இவர் காவல்துறை எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருகிறார். இவர்களது குடும்பம் 6 வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவரது மகள் ஜோதி துர்கா, நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்துள்ளார். படிப்பில் கெட்டிக்காரிதான் ஜோதி துர்கா.. நேற்று தனது வீட்டாருடன் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இரவு உணவும் முடித்துக்கொண்டு தனியரையொன்றில் நீட் தேர்வுக்கு படிப்பதாக கூறி சென்றுள்ளார்.

வழக்கமான ஒன்றாக கருதிய பெற்றோரும் இதை கண்டுகொள்ளவில்லை. இந்த சூழலில், நீட் தேர்வு குறித்து நினைத்தும், தனது பெற்றோர் தன் மீது வைத்த நம்பிக்கை தோல்வி அடைந்தால்போய்விடுமே என்ற அச்சத்தாலும் மன அழுத்தத்திற்கு ஆளான ஜோதி துர்கா, தனது குடும்பத்தாருக்கு கடிதம் ஒன்றை எழுதியதுடன், ஆடியோ ஒன்றையும் பதிவு செய்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் விடிந்த பின்புதான் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. மருத்துவராகி கழுத்தில் ஸ்தெதஸ்கோப் மாட்ட வேண்டிய கழுத்தில் கயிறு இருக்கி கிடப்பதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியில் ஆடிப்போயினர். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட மாணவியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

மாணவி கடைசியாக பதிவு செய்திருந்த ஆடியோவில் ” என் மீது அனைவரும் பெரும் எதிர்பார்ப்பு வைத்துள்ளீர்கள்… நான் ஒரு வேலை தோல்வி அடைந்துவிட்டால் உங்களால் அதை தாங்கிகொள்ள முடியாது. என்னை நினைத்து யாரும் கவலை பட வேண்டாம், தம்பி ஸ்ரிதரின் படிப்பையும், எதிர்காலத்தையும் பாருங்கள்.. அப்பா உங்களுக்கு இதய நோய் உள்ளது உடம்பை கவனித்துக்கொள்ளுங்ள்… அம்மா Im going to miss you” என பதிவிட்டுள்ளார்.

அரியலூரைச் சேர்ந்த மாணவன் நீட் தேர்வின் மீதான அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் மாணவி ஜோதி துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மனமல மருத்துவர்களிடம் பேசியபோது… மாணவர்களை கவனிக்க வேண்டியது பெற்றோரின் மிக முக்கிய பொருப்பாக உள்ளது. அவர்களின் மன நிலை எப்படி உள்ளது என்பதை பெற்றோர் ஆராய்ந்துகொண்டே இருக்க வேண்டும்.., அவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் பக்க பலமாக நாங்கள் உள்ளோம் என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டும். பெற்றோர் தங்கள் எதிர்பார்ப்பையும், அன்பையும் அளவு கடந்து காண்பிக்கும்போது, குழந்தைகள் ஒரு வகையான மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடம். அதே நேரம் மாணவர்கள் இதுபோன்ற முடிவை எடுப்பது மிகவும் ஆபத்தானது. பிரச்னைகளுக்கு தற்கொலை தீர்வு அல்ல என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0