ஆட்டோ டிரைவர் கொலை: உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

Author: Udhayakumar Raman
28 November 2021, 2:00 pm
Quick Share

திருச்சி: துறையூரில் நள்ளிரவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை மர்ம கும்பல் படுகொலை செய்து விட்டு தப்பி உள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (38). துறையூரில் வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டி வந்தார். நேற்று நள்ளிரவு ஆலத்துடையான்பட்டியில் உள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது செல்போனில் தொடர்புகொண்டு சிலர் அழைத்துள்ளனர். செல்போன் அழைப்பை தொடர்ந்து வீட்டிலிருந்து
புறப்பட்டு சென்றார். எம்ஜிஆர் நகர் அருகே அவர் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் மறைந்திருந்த அடையாளம் தெரியாத சில மர்ம கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் ரத்த வெள்ளத்தில் பிரபு துடிதுடித்து இறந்து போனார். வெளியில் சென்ற கணவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த மனைவி உஷா கணவரை தேடிச் சென்ற போது, பிரபு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து குச்சி விடவே அக்கம்பக்கத்தினர் அங்கு குவிந்தனர்.

இதுகுறித்து துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அருள்மணி, துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உப்பிலியபுரம் துணை ஆய்வாளர் சாந்தகுமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பிரபுவுக்கு முன் விரோதம் உள்ளதா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.கொலை செய்யபட்ட பிரபுவுக்கு திருமணமாகி உஷா என்ற மனைவியும், தேவி (8), தேவன் (8) ஆகிய இரட்டைக் குழந்தைகளும் மற்றும் நித்ரா (4) என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.

Views: - 294

0

0