சாலையில் கிடந்த ரூ.10 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் : குவியும் பாராட்டு!!
8 February 2021, 7:26 pmதிருப்பூர் : சாலையில் கேட்பாரற்று கிடந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து அவிநாசி காவல் நிலையத்தில் ஒப்படைத்த சரக்கு ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 45). இவர் அவிநாசியில் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து தானே வாடகைக்கு ஓட்டியும் வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை அவிநாசி வடக்கு ரத வீதியில் தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் நூறு ரூபாய் பண கட்டு கிடப்பதை கண்டு உடனடியாக ஆட்டோவை அங்கேயே நிறுத்திவிட்டு இறங்கி பார்த்துள்ளார்.
யாரோ வாகனத்தில் செல்லும் போது பணத்தை தவறவிட்டிருக்கலாம் என உணர்ந்த சந்திரமோகன் உடனடியாக அவிநாசி காவல் நிலையத்திற்கு சென்று அங்கு காவல் ஆய்வாளர் அருளிடம், தான் சாலையில் கண்டெடுத்ததை கூறி பத்தாயிரம் ரூபாய் பணத்தை ஒப்படைத்துள்ளார்.
மேலும் பண்தை உரியவரை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு கூறினார். நேருக்கு நேர் நிற்பவர்களையே ஏமாற்றி பணம் பறிக்கும் காலத்தில் கேட்பாரற்று சாலையில் கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரமோகனை போலீசார் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
0
0