தந்தை இறந்ததால் பிறந்தது இந்தப் புதியக் கருவி! முதலமைச்சரின் பாராட்டைப் பெற்ற இரட்டைச் சகோதரர்கள் !
29 August 2020, 1:10 pmமதுரை மாவட்ட இரட்டைச் சகோதரர்கள் தாங்கள் கண்டுபிடுத்த ஒரு தொழில்நுட்பக் கருவியால் தமிழகத்தையே இப்போது திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். இதற்காக தமிழக முதலவரிடமும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர். இவர்களைப் பற்றியும் இவர்களின் கண்டுபிடிப்பைப் பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கல்வி ஆர்வம்
மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர்கள் தான் இந்த பாலச்சந்தர், பாலக்குமார் இரட்டையர்கள். இவர்களின் பெற்றோர் கண்ணன் கலைவாணி. இந்த இரட்டைச் சகோதரர்கள் மேலூர் அரசுப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகின்றனர். இளம் பருவம் முதலே கல்வி மீதும் கண்டுபிடிப்புகள் மீதும் தீரா மோகம் கொண்ட இவர்கள் சிறு சிறு கருவிகளைச் செய்து பள்ளிகளில் நடந்த போட்டிகளில் பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர்.
பிரிவால் பிறந்த நுட்பம்
இவர்களின் தந்தை கண்ணன் விபத்தில் சிக்கி ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் உயிரிழந்துள்ளார். தங்கள் தந்தைக்கு நிகழ்ந்த சோகம் வேறு யாருக்கும் நிகழ்ந்து விடக்கூடாது எண்ணிய லட்சிய இளைஞர்கள் ஆம்புலன்ஸ் வரும் வழியில் தாமதத்தைத் தவிர்க்க புதிய கருவி ஒன்றை உருவாக்கினர்.
தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல்
உயிருக்கு போராடுபவர்களையும் அவசர உதவி தேவைப்படுபவர்களையும் ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் புறப்பட்டதும் இரண்டு கிலோமீட்டர் துாரத்திற்கு முன்பே ஆம்புலன்சில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்எம்எஸ் வந்துவிடும். இதைதொடர்ந்து சர்க்யூட் போர்டு தானாக இயங்க ஆரம்பித்து ரோட்டோர கம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒலி பெருக்கியில் ‘ஆம்புலன்ஸ் வருகிறது. வழிவிடுங்கள்’ என்று தெரிவிப்பதோடு ஊதா நிறத்தில் விளக்குகளை ஒளிரச் செய்யும்.
ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட தூரத்தைக் கடந்ததும் கட்டுப்பாட்டு அறைக்கு மீண்டும் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி சேவை துண்டிக்கப்படும் மற்றும் அறிவிப்பு வெளியிடும் ஒலிபரப்பும் நிறுத்தப்படும்.
முதல்வர் பாராட்டு
இந்த இரட்டைச் சகோதரர்களின் அருமையான “தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தின்” கண்டுபிடிப்பைப் பற்றி அறிந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ட்விட்டரில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு அவர்கள் மேலும் பல சாதனைகள் செய்ய வேண்டுமென்று தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.