அவலாஞ்சி, எமரால்டு அணைகள் முழுக் கொள்ளளவை எட்டி வருவதால், எந்நேரத்திலும் அணைகள் திறக்கப்படும் என, அதிகாரிகள் அறிவிப்பு

8 September 2019, 6:30 am
Ooty Emerald Dam
Quick Share

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அவலாஞ்சி, எமரால்டு அணைகள் முழுக் கொள்ளளவை எட்டி வருவதால், எந்நேரத்திலும் அணைகள் திறக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உதகை அருகே உள்ள அவலாஞ்சி அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், குந்தா, கெத்தை, பரளி மற்றும் பில்லுார் மின் நிலையம் வரை ராட்சத குழாயில் மூலம் கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

தொடர் மழையால், அவலாஞ்சி அணையின் மொத்த அடியான, 171 அடியில், 169 அடி வரை தண்ணீர் சேகரமாகியுள்ளது. இதேப் போன்று எமாரால்டு அணையில் 184 அடியில் 182 அடி நீர் இருப்பு உள்ளது, இந்த அணைப்பகுதிகள் விரைவில் முழுக் கொள்ளவை எட்டும் நிலையில் விரைவில் திறக்கப்படும் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து குந்தா மேற்பார்வை செயற்பொறியாளர் ஆல்துரை கூறுகையில், ”அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணை முழு கொள்ளளவை எட்ட, 2 அடி வரை தண்ணீர் தேவைப்படுகிறது. மழை பெய்து அணை நிரம்பினால் எந்நேரத்திலும் அணை திறக்கப்பட்டு, உபரி நீர் வெளியேற்றப்படும்,” என்றார்.

இந்த அணை நீர் வெளியேற்றப்படும் போது இப்பகுதிகளில் மலைத்தோட்ட காய்கறி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பெருமளவு பயனடைவார்கள் என்றும், சமவெளிப் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து காணப்படும் என்பதால் பாசனத்திற்கும், குடி நீருக்கும் பெருமளவு உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.