அய்யா வைகுண்டர் அவதார தினம் : குமரியில் ஒன்று கூடிய பக்தர்கள்!!

4 March 2021, 8:52 am
Ayya Vaikundar - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : அய்யா வைகுண்டரின் 189 வது அவதார தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுவாமிதோப்புக்கு வைகுண்டரின் தலைமைப் பதிக்கு நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தில் குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யாவைகுண்டர். இவர் அவதரித்த நாளான மாசி மாதம் 20ஆம் தேதி அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவாக ‘அய்யாவழி’ சமூகத்தினர் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

அதன்படி அய்யா வைகுண்டரின் 189 ஆவது அவதார தினவிழா இன்று கொண்டாடப்பட்டது, இதனையொட்டி நேற்றே நெல்லை, துாத்துக்குடி, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாகர்கோவில் வந்தனர்.

தொடர்ந்து இன்று காலை நாகர்கோவில் நாகராஜாகோவில் திடலில் இருந்து சுவாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் தலைமைப் பதி நோக்கி அய்யா அவதார தின விழா பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

பேரணியின் முன்பாக அய்யாவின் ‘அகிலதிரட்டு’ புத்தகத்தை, காவிக்கொடி பக்தர்கள் பூப்பல்லக்கில் எடுத்து சென்றனர். கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், தென்தாமரைகுளம் வழி ஊர்வலம் சுவாமித்தோப்பு சென்றடைந்த இந்த பேரணியில் முத்துக்குடைகள், பலதரப்பட்ட மேளதாளங்கள் இடம்பெற்று இருந்தன.

பேரணியில் இடம்பெற்று இருந்த குழந்தைகளின் கோலாட்டம் வழிநெடுகிலும் கூடி இருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது, வைகுண்டர் பிறந்த நாளில், சுவாமித்தோப்புக்கு நடந்து சென்று அய்யாவை வழிபட்டால் நினைப்பது நிறைவேறும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அய்யா வைகுண்டர் அவதார தின பேரணியை முன்னிட்டு நாகர்கோவில் முதல் சுவாமிதோப்பு வரையிலான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இத் தினத்தை முன்னிட்டு குமரி மாவடத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கபட்டு உள்ளது.

Views: - 34

0

0