‘பாகுபலி ஆபரேஷன் ஸ்டார்ட்‘ : 7 வனக்குழுக்கள் அமைத்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தீவிரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2021, 8:12 pm
Baahubali Elephant - Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் பாகுபலி ஆபரேஷனில் தலா 6 பேர் கொண்ட 7 வனக்குழு மற்றும் 5 பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அட்டகாசம் செய்து வரும் ஒற்றை காட்டு யானை பாகுபலியினை பிடித்து அதன் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் ரேடியோ காலர் பொருத்த வனத்துறை முடிவு செய்துள்ளது.

அதன் ஒருபகுதியாக பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம், மாரியப்பன், வெங்கடேஸ்வரா உள்ளிட்ட 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பாகுபலி ஆபரேஷனில் ஈடுபடவுள்ள வனத்துறையினருடன் வனச்சரகர்கள் பழனிராஜா, செந்தில்குமார் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையின் முடிவில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் உத்தரவின்பேரில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் அறிவுறுத்தலின்படி ஒரு வனவர் மற்றும் 5 வனக்காவலர்கள் என தலா 6 பேர் கொண்ட 7 வனக்குழுவினர் அமைக்கப்பட்டு வனப்பகுதியில் பாகுபலியினை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்,வன கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் மருத்துவர்கள் மனோகரன், கிரிதரன், அசோகன், ராஜேஷ்குமார் உள்ளிட்ட 5 பேர் கொண்ட மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர் சுகுமாரன் கூறுகையில் பாகுபலி யானை தற்போது முழு உடல்நலத்துடன் இருப்பதாகவும்,அதனை கும்கிகள் உதவியுடன் பிடித்து மயக்க ஊசி செலுத்தி பிடித்து அதன் தலையில் ரேடியோ காலர் பொருத்த உள்ளதாகவும், அவ்வாறு பொருத்துவதால் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து பயிர்களை சேதம் செய்யாமல் தடுக்க முடியும் என தெரிவித்தார்.

Views: - 276

0

0