மாமியாரை தாக்கிவிட்டு மனைவியிடம் வசித்து வந்த குழந்தையை கடத்திய கணவன்… சிசிடிவி காட்சிகளை வைத்து பெண் போலீசில் புகார்!!

Author: Babu Lakshmanan
4 July 2022, 11:15 am
vellore-kidnapped----updatenews360
Quick Share

கணவரை பிரிந்து வாழும் நிலையில் கும்பலாக வந்து குழந்தையை கடத்தி சென்றதாக கணவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் தொரப்பாடி காமராஜர் தெருவை சேர்ந்தவர் பிரியா. இவருக்கும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த மென்பொறியாளர் ரவி என்பவருக்கும், கடந்த 2015ம் ஆண்டு குடும்பத்தாரால் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாக தனது பெண் குழந்தையுடன் தொரப்பாடியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு வந்த பிரியா, கடந்த 2019ம் ஆண்டு முதல் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். ஜீவனாம்சம் கேட்டு வேலூர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை தனது 6 வயது பெண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், வீட்டில் உறங்க வைத்துவிட்டு, மருந்து வாங்க பிரியா மருந்தகத்திற்கு சென்றிருந்தார். அங்கு நான்கு நபர்களுடன் முகக்கவசம் அணிந்தவாரு வந்த பிரியாவின் கணவர் ரவி, வீட்டில் இருந்த பிரியாவின் தாயை சரமிரிமாக தாக்கிவிட்டு உறங்கிக்கொண்டிருந்த 6 வயது பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு இருசக்கர வாகனம் மற்றும் காரில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த பிரியா இது தொடர்பாக பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பாகாயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இச்சம்பவங்கள் அனைத்தும் பிரியாவின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், நான்கு நபர்களுடன் உள்ளே நுழையும் ரவி பிரியாவின் தாய் மற்றும் அருகில் இருக்கக்கூடிய வீட்டினரையும் தாக்கிவிட்டு செல்லும் பதபதைக்க வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக பிரியா கூறுகையில், “என் மீது அதிக சந்தேகப்பட்டு என்னையும், குழந்தையையும் தாக்கினார். இதனாலேயே நான் எனது அம்மாவீட்டுக்கு வந்துவிட்டேன். இதே போல், கடந்த 2020ம் ஆண்டு எனது குழந்தையை கடத்திச் செல்ல முயற்சி செய்துள்ளார். எனது குழந்தைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. மிகவும் அச்சமாக உள்ளது. காவல்துறையினர் விரைவாக நடவடிக்கை எடுத்து எனது குழந்தையை மீட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்,” எனக் கூறினார்.

Views: - 477

0

0