பகவதி அம்மன் கோயிலுக்குள் சாக்கடை நீருடன் புகுந்த மழை வெள்ளம்; பேரூராட்சி, அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியம் என புகார்

Author: Babu Lakshmanan
2 October 2021, 5:59 pm
kumari temple 1 - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உலக சுற்றுலாதலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குள் சாக்கடை நீருடன் மழை வெள்ளம் புகுந்ததால் பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து இன்று மதியம் முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. இதில் சுற்றுலா தலமான கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வளாகத்திற்குள் சாக்கடை நீருடன் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பேரூராட்சி மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது; கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்குள் மழை வெள்ளத்துடன் சாக்கடை நீரும் புகுந்துளள்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் செல்லும் ரதவீதியின் முன்பு ஒரு வேகத்தடை இருந்தது. தற்போது இந்த வேகத்தடை சமீபத்தில் அகற்றப்பட்டுள்ளது. இதனால் மேட்டு பகுதியில் இருந்து வரும் மழை வெள்ளம் வாவத்துறை வழியாக கடலுக்குள் செல்லாமல், நேரடியாக பகவதிஅம்மன் கோவில் வளாகத்திற்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.இப்படி பட்ட பிரசித்தி பெற்ற இந்த அம்மன் கோவிலுக்குள் சாக்கடை நீருடன் மழை வெள்ளம் புகுந்தது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகும். இதற்கு முக்கிய காரணம் கன்னியாகுமரி பேரூராட்சி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளேயாகும். இதனால் அவர் மீது மாவட்ட நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல, குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்குட்பட்ட ஈச்சன்விளையில் ஊரின் நடுவே செல்லும் தார்சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் அந்த சாலையில் சாதாரண மழை வந்தாலே மழைநீர் தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இந்த சாலையை சீர் செய்யுமாறு ஊர் பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு மனு வழங்கினர்.

பேரூராட்சி நிர்வாகம் இந்த சாலை எங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்டதல்ல. இதை சரி செய்ய வேண்டுமானால் நீங்கள் மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம் சென்று புகார் கொடுங்கள் என கூறியுள்ளனர். இதனையடுத்து ஊர் பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே புகார் கொடுத்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை பெய்த மழையில் சாலை முழுவதும் மழை வெள்ளம் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. இதனால் பொதுமக்கள் அந்த சாலையில் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். சாலையோரத்தில் வீடு கட்டி வசித்து வருபவர்கள், தங்கள் வீடுகளில் இருந்து அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் வரமுடியாமல் அவதியடைந்து வருகின்றனர். நெடுஞ்சாலை துறையின் அலட்சியமே இதற்கு காரணம் என ஊர் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் .மேலும் இதே நிலை நீடித்தால் ஊர் பொது மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 596

0

0