பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு.! அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.!!

14 August 2020, 10:34 am
Bhavani Water Release - Updatenews360
Quick Share

ஈரோடு : பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பண்ணன் ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்தனர்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து 102 அடியை எட்டியுள்ளது.

இந்நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்ததன் அடிப்படையில் இன்று பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் மற்றும் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்தனர்.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் ஒரு லட்சத்து 3 ஆயிரம் 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது முதற்கட்டமாக கீழ்பவானி வாய்க்காலில் 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி நீர் 120 நாட்களுக்கு திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.94 அடியாகும், நீர் இருப்பு 30.2 டிஎம்சி ஆகவும் நீர்வரத்து வினாடிக்கு 3622 கன அடியாகவும் உள்ளது. தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்கு 800 கன அடி நீரும் காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 600 கன அடி நீரும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கும் 500 கன அடி நீரும் வெளியேற்றம் செய்யப்பட்டது வருகிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 6

0

0