கொரோனா பாதித்த குடும்பங்களின் குழந்தைகளுக்கு பரவும் ‘பிம்ஸ்‘ நோய்? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!!

Author: Udayachandran
13 October 2020, 12:25 pm
Radhakrishnan - Updatenews360
Quick Share

மதுரை : கொரோனோ பாதிக்கபட்டவர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத் துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மதுரை கொரோனா மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தைப் பொறுத்தவரை பெரிய அளவிலான மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் தாலுகா அளவிலான மருத்துவமனையிலும் ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது,

தமிழகத்தில் மதுரை, கோவை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கொரோனோ பாதிப்பு 5 விழுக்காடுக்கும் குறைவாக குறைந்துள்ளது. கொரோனோ குறைந்து வரும் நிலையில் மழைக்காலம் துவங்குவதால் கொரோனோ மட்டுமல்லாமல் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

பொதுமக்கள் பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். பண்டிகை மற்றும் மழைக்காலங்களில் கொரோனோ பாதிப்பை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தீபாவளி பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடித்து பண்டிகை காலங்களில் பொருட்கள் வாங்க வேண்டும், தமிழகத்தில் கொரோனோ இறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து தற்போது 1.5 ஆக குறைந்துள்ளது. கொரோனோ பாதிப்பு ஏற்பட்டால் தானாகவே மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அரசு மருத்துவமனைகளில் கொரோனோவிற்கு 80 வகையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காய்ச்சல் முகாம் குறைக்கப்படவில்லை, சென்னை கோவை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் தேவைக்கு ஏற்ப காய்ச்சல் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கொரோனோ பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தற்போது தகரம் வைத்து அடைக்கபடுவதில்லை என்று தெரிவித்தார்.

பொதுமக்கள் கூடுவதால் ஒரு சிலருக்கு ஏற்படும் கொரோனோ பாதிப்பால் பதட்டப்பட தேவையில்லை. கொரோனோ பாதிப்பிற்கு நிரந்தர தடுப்பு மருந்து வரும் வரை மக்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் கொரோனோ பாதிக்கபட்டவர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறினார்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் அமைப்பதற்கான ஜப்பானை சேர்த்த ஜைக்கா நிறுவனம் ஜனவரிக்குள் ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாகவும் ஒப்புதல் வழங்குவதற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெருவதாகவும் ஒப்புதல் வாங்கியவுடன் விரைவில் எய்ம்ஸ் கட்டிட பணிகள் துவங்கும் என்று கூறினார்.

Views: - 94

0

0