மதுபோதையில் புகையிலை கேட்டதால் இரு தரப்பு மோதல் : காரை ஏற்றி கொல்ல முயற்சித்ததில் வேடிக்கை பார்த்தவர் பரிதாப பலி!!
Author: Udayachandran RadhaKrishnan5 August 2021, 2:06 pm
திருப்பூர் : மதுபோதையில் ஹான்ஸ் கேட்டதால் இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் காரை ஏற்றி கொலை செய்ய முயன்றதில் வேடிக்கை பார்த்த அப்பாவி வாலிபர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கவுண்டம்பாளையம் சாலையில் மகாலட்சுமி நகர் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி மாலை ராயர்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் சிட்கோ தொழில்பேட்டை அருகில் 30க்கும் மேற்பட்ட இரண்டு தரப்பினர் மதுக்கடையில் மது அருந்தியதாகவும் பின்னர் அருகே உள்ள மைதானத்திற்கு சென்று அமர்ந்திருந்தபோது ஒரு தரப்பை சேர்ந்த சிலர் மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்களிடம் ஹான்ஸ் கேட்ட தாகவும் கூறப்படுகிறது.
இதில் ஹான்ஸ் தரமறுத்ததில் இரண்டு தரப்பினர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. மேலும் 30க்கும் மேற்பட்ட இரண்டு பிரிவினரும் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக விரட்டி விரட்டி தாக்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதில் ஒரு தரப்பை சேர்ந்த நபர் ஒருவர் தனது காரில் மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் மீது அதிவேகமாகச் சென்று மோதி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதில் ராயர்பாளையத்தை சேர்ந்த சங்கரலிங்கத்திற்கு கால் முறிவும், திண்டுக்கல் நத்தத்தை சேர்ந்த கர்ணன், ஜோலார்பேட்டை யைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் மண்டை உடைந்து உடல் முழுக்க பலத்த காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் காரில் மோதி விட்டு அதனை ஓட்டி வந்த ராயர் பாளையத்தை சேர்ந்த பிரபு மற்றும் கதிர் அங்கு இருந்து மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த இரு தரப்பினர் இடையேயான மோதல் சம்பவம் குறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் டிஎஸ்பி வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
மேலும் காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்கு அவர்களை கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு கார் மோதியதில் கால்களை இழந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அப்பாவி வாலிபர் சங்கரலிங்கம் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளில் பிரபு நேற்று கைது செய்யப்பட்டார்.
வழக்கில் தொடர்புடைய கார் பல்லடம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது . மேலும் தலைமறைவாக உள்ள கதிர் என்பவரை பல்லடம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுவரை இந்த இருதரப்பு மோதல் சம்பவம் தொடர்பாக கர்ணன்,விக்னேஷ், மகேஷ் குமார், சக்திவேல், சரவணகுமார், கனகராஜ், மணிகண்டன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்லடம் அருகே ராயர்பாளையத்தில் மதுபோதையில் ஹான்ஸ் கேட்டது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் வேடிக்கை பார்த்த அப்பாவி வாலிபர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டதும் அதனைத் தொடர்ந்து 8 பேர் மீது கொலை வழக்குப் பாய்ந்ததும் பல்லடம் பகுதியில் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0