ஒரு வயது மகனுக்கு பிறந்தநாள்.. கேக் வாங்கி பைக்கில் வந்த தந்தை : லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்து.. திண்டுக்கல் அருகே சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 January 2022, 12:04 pm
Accident -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : தனது ஒரு வயது மகனுக்கு பிறந்த நாள் கொண்டாட கோவையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்ற நபர் லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான லாரியை அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (வயது 55) என்ற ஓட்டுநர் இயக்கி வருகிறார்.

இவர் திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் நூல் சாலையிலிருந்து நூல் பண்டங்களை ஏற்றி கோயம்புத்தூருக்கு லாரியில் சென்று கொண்டிருந்தார்.

இதே போல திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா புதுக்குடியை சேர்ந்த கார்த்திக் (வயது 35) என்பவர் கோவையில் உள்ள ஒரு பேக்கரியில் பணி செய்து வருகிறார்.

இந்த நிலையில் தனது ஒரு வயது மகனின் பிறந்தநாளுக்காக சொந்த ஊர் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரியின் மீது நேருக்கு நேராக மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் கார்த்திக் என்பவருக்கு வெண்ணிலா என்ற மனைவியும் மனிஷா (வயது 9), மிர்சிகா (வயது 4) என்ற இரு பெண் குழந்தைகளும் தர்னீஸ் (வயது 1) என்ற ஆண் குழந்தையும் உள்ளது தெரியவந்தது.

மேலும் மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக தான் பணி செய்யும் பேக்கரியில் இருந்து கேக்குகளை பார்சல் எடுத்துக் கொண்டு வரும்போது எதிர்பாராத விதமாக சம்பவம் நடைபெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Views: - 242

0

0