திமுக ஆட்சியில் குறுநில மன்னர்களாக செயல்படும் அமைச்சர்கள்… அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலகியே ஆகனும் ; கரூர் மாவட்ட பாஜக!!

Author: Babu Lakshmanan
12 September 2022, 4:56 pm
Quick Share

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி விலக வேண்டி வலியுறுத்தி பாஜக சார்பில் நடத்தப்படவிருந்தஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

கரூரில் தடையை மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சி – போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி தொண்டர்களை கைது செய்வதாக மிரட்டல் மற்றும் குற்றச்சாட்டு – நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர், தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. அப்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்கப்படாததால், பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கில் மீண்டும் விசாரிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் தற்பொழுது திமுக ஆட்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வழக்கு விசாரணை முடியும் வரை தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கரூர் மாவட்ட பாஜக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதுடன், இதற்கு, 3 நாட்கள் கெடுவும் விதிக்கப்பட்டது.

இது குறித்து திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில் மாவட்ட பாஜக சார்பில் இன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்புறம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் ஆரம்பத்தில் அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு அனுமதி மறுப்பதாக காவல் துணை காண்காணிப்பாளர் சார்பில் கடிதம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை முதலே கரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகிலும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவர்களது மாவட்ட பாஜக அலுவலகம் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கட்சி அலுவலகத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் வந்த பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். தவறும்பட்சத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், கரூர், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்காக அழைத்து வந்துள்ளனர்.

போராட்டத்திற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களை போலீசார் வழிமறித்து கைது செய்துள்ளனர். இது கண்டிக்கதக்கது. மாநில தலைவரின் அறிவுறுத்தலின் பெயரில் நீதிமன்றம் சென்று ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதி பெற்று, மீண்டும் அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம், என்றார்.

அதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக கோரி கண்டன கோஷங்களை சிறிது நேரம் எழுப்பினர். பின்னர், அங்கு வந்த போலீசார் அவர்களிடம் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தும்படி அறிவுறுத்தியதன் அடிப்படையில் அவர்கள் கலைந்து சென்றனர். கரூர் மாநகரங்களில் முக்கிய இடங்களில் அதிகளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 383

0

0